ஹார்முஸ் நீரிணையில் கச்சா எண்ணெய் விநியோக சீராக்கம் நிலையான மாற்றத்தை உருவாக்குமா!

சர்வதேச பொருளாதரத்தில் எரிபொருள் முக்கிய காரணியாக அமைகின்றது. அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே சர்வதேச நாணயமாக அமெரிக்க டொலருக்கான அறிமுகமாக எரிபொருள் ஏற்றுமதி இறக்குமதியில் அமெரிக்க டொலரின் பயன்பாடு அமைகின்றது. இலங்கை மக்களும் எரிபொருளின் முக்கியத்துவத்தை நன்கு அறிவார்கள். இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, மக்கள் எதிர்ப்பு போராட்டத்தை உருவாக்கியமையில் எரிபொருட்களின் விலை உயர்வே உடனடிக் காரணியாக அமைந்திருந்தது. 2023, அக்டோபர்-7 காசா போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து எரிபொருட்களின் விலை ஸ்திரத்தன்மையை இழந்திருந்தது. எனினும் 2026, பெப்ரவரி-28அன்று ஈரானுக்கு எதிரான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்த கடந்த ஏழு மாதங்களாக இடம்பெற்றுவரும் அமெரிக்கா எதிர் ஈரான் போரினால் பிரதான எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டு, எண்ணெய் இறக்குமதி உலகளவில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது ஈரானும் அமெரிக்காவும் மத்தியஸ்தர்களுடன் இணைந்து ஏழு மாத காலப் பகைமைகளை முடிவுக்கு கொண்டுவரப் பணியாற்றி வருகின்றனர். மறுமுனையில் ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்க கடற்படை விதித்துள்ள முற்றுகை மற்றும் ஹார்முஸ் நீரிணையிலிருந்து வெளியேறும் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை அளித்து வரும் பாதுகாப்பு ஆகியன குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் ஹார்முஸ் நீரிணை வழியாக வெளியேறும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இக்கட்டுரை எண்ணெய் விநியோகத்தில் அமெரிக்க-ஈரான் போரின் போக்கை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

பாரசீக வளைகுடாவிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேற்றம் மீண்டும் அதிகரித்திருப்பது வியக்கத்தக்க வகையில் உள்ளது. கப்பல் போக்குவரத்து நிறுவனமான ‘கேப்லர்’ (Kpler)இன் தரவுகளின்படி, செப்டம்பர் மாத மத்தியில் நாளொன்றுக்கு சராசரியாக 6 முதல் 8 மில்லியன் பீப்பாய்களாக இருந்த எண்ணெய் வெளியேற்றம், தற்போது வாராந்திர சராசரி அடிப்படையில் கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 13.5 மில்லியன் பீப்பாய்களாக உள்ளது. குறிப்பாக சவூதி அரேபியா தனது 2025ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி இலக்குகளைக் கூட விஞ்சும் வகையில் செயல்பட்டு வருகிறது. ஹார்முஸ் நீரிணை வழியாகவும், செங்கடல் வழியாகவும் பெருமளவிலான கச்சா எண்ணெய் வெளியேற்றப்படுகிறது. போருக்கு முந்தைய நிலையில் நாளொன்றுக்கு 5.4 மில்லியன் பீப்பாய்களாக இருந்த சவூதியின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி, தற்போது குறைந்தது 6.4 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்துள்ளதாக கேப்லர் மதிப்பிட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்தின் உண்மையான மீட்சியைத் துல்லியமாகக் கணக்கிடுவது மிகவும் கடினமான ஒன்றாகும். ஏனெனில், கப்பல்களைக் கண்காணிக்கும் பல்வேறு சேவைகளும் வெவ்வேறு காலகட்டங்களுக்கான வெவ்வேறு புள்ளிவிவரங்களையே அளிக்கின்றன. இருப்பினும், இதிலுள்ள போக்கு தெளிவாக உள்ளது. ஹார்முஸ் வழியாக மீண்டும் எண்ணெய் வெளியேறத் தொடங்கியுள்ளது.

ஹார்முஸ் நீரிணை வழியான சீரான கச்சா எண்ணெய் வெளியேற்றம் தொடர்பான செய்திகள், அமெரிக்க-ஈரான் போரின் முடிவை உறுதிசெய்வதற்கு போதுமானதா என்பதில் நுணுக்கமாக பார்வை அவசியமாகின்றது.

முதலாவது, ஏழு மாத காலப் போருக்குப் பிறகு எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்த ஓரளவு மீட்சி, அமெரிக்காவில் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாக அதிகாரிகளுக்கு நம்பிக்கையளித்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புடன் கூடிய கப்பல் போக்குவரத்தும், ஈரானின் பொருளாதார உயிர்நாடியாகத் திகழும் அந்நாட்டு கப்பல்கள் மீதான தொலைதூர முற்றுகையும் இணைந்து, உலகப் பொருளாதாரத்திற்கு நிவாரணம் அளிப்பதோடு ஈரானை பேச்சுவார்த்தைக்கு இணங்கவும் வைக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்பினர். போர்நிறுத்தக் காலத்தில் சீனாவுக்கு அனுப்பப்பட்ட கடைசி சில கப்பல் சுமைகள் கொண்ட எண்ணெய் விநியோகம் தீர்ந்துவிட்ட நிலையில், இன்னும் சில வாரங்களிலேயே ஈரானின் பொருளாதாரச் செயல்பாடுகள் முடங்கும் நிலையை எட்டக்கூடும் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் கணிக்கிறார். நாணயத்தின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவது மற்றும் அத்தியாவசிய இறக்குமதிகளுக்குப் பணம் செலுத்துவதற்கான தெளிவான வழிமுறைகள் இல்லாதது போன்ற காரணங்களால், ஈரானிய ஆட்சிக்கு மட்டுமல்லாமல் அந்நாட்டு மக்களுக்கும் பொருளாதார ரீதியான அச்சுறுத்தல் மிகவும் தீவிரமாக உள்ளது என அமெரிக்காவால் கணிக்கப்படுகின்றது.

இரண்டாவது, அமெரிக்காவின் நம்பிக்கை மற்றும் ஹார்முஸ் நீரிணை மீட்பு ஆகியன ஒருதலைபட்சமாக இருப்பது பிரச்சினைகள் குறித்த அச்சத்தை பேணுவதாகவே உள்ளது. பிரச்சனைகள் ஏராளமாகவே இருக்கின்றன. மிகவும் உடனடியான அழுத்தமாகவும் இருப்பது, ஹார்முஸ் மீட்பு ஒருதலைப்பட்சமாக இருப்பதுதான். ஈரான் தொடர்ந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றது. கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் மூன்று கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எண்ணெய் விநியோக சீராக்கம், நீண்ட காலத்திற்குத் தொடரக்கூடிய ஒரு இயல்பு நிலை அல்ல என்ற செய்தியையே ஈரானின் தாக்குதல்கள் வெளிப்படுத்துகின்றது. வெல்த் கிளப்பின் தலைமை முதலீட்டு வியூக நிபுணர் சுசானா ஸ்ட்ரீட்டர், ‘ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கொண்டு செல்லப்படுவது ஊக்கமளிப்பதாக இருந்தாலும், குறிப்பாக பரந்த அளவிலான மோதல் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில், இந்த எண்ணெய் வரத்து இன்னும் முழுமையாகப் பாதுகாப்பானது அல்லது உத்தரவாதமானது எனக் கருதப்படவில்லை,’ என்று அல் ஜசீரா ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். மேலும், பெரும்பாலான கப்பல் போக்குவரத்து, ஹார்முஸ் நீரிணைக்கு அப்பால் அமெரிக்காவின் பாதுகாப்பில் உள்ள தெற்குப் பாதையைப் பயன்படுத்துகிறது. இதற்குத் தீவிரமான மற்றும் அதிக செலவு பிடிக்கக்கூடிய கடற்படைப் பாதுகாப்பு தேவைப்படுகிறது. இத்தகைய ஏற்பாடு காலவரையின்றி நீடிக்க முடியாது.

மூன்றாவது, ஹார்முஸ் நீரிணை மீதான ஈரானின் செல்வாக்கும் எண்ணெய் விநியோகம் மீதான ஆதிக்கமும், அதன் பேரம் பேசும் ஆற்றலின் பலமாகும். எண்ணெய் விநியோகம் மீண்டும் அதிகரித்திருப்பது ஈரானுக்கு ஒரு சவாலாகவே அமைந்துள்ளது. உலகின் மிக முக்கியமான எரிசக்தித் தடைப் புள்ளிகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையை சீர்குலைக்கும் தனது திறனை, அமெரிக்காவின் இராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கு எதிரான ஒரு பேரம்பேசும் சக்தியாகப் பயன்படுத்த ஈரான் முயன்று வருகிறது. ஆனால், ஈரான் அமெரிக்கக் கடற்படை முற்றுகையின் கீழ் இருக்கும் நிலையில், பெருமளவிலான எண்ணெய் அந்த நீர்வழிப்பாதை வழியாகத் தொடர்ந்து கொண்டு செல்லப்பட்டால், ஈரானின் பேரம்பேசும் சக்தி குறையக்கூடும். ஏற்கனவே கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளான ஈரானின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ள சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில், தனக்குச் சாதகமான ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான ஈரானின் செல்வாக்கை, ஹார்முஸ் நீரிணை மீதான செல்வாக்கு இழப்பு குறைக்கக்கூடும். இவ்வாறான சூழலில் ஹார்முஸ் நீரிணையில் இயல்பு நிலை விரைவில் திரும்பும் என்றோ, அல்லது அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ஈரான் எளிதில் பணிந்துவிடும் என்றோ நினைப்பது தவறானது என சர்வதேச அரசியல் அவதானிகள் நம்புகிறார்கள். அதேவேளை ஹார்முஸ் மீதான தனது கட்டுப்பாடு தளர்ந்து வருகிறது என்ற எந்தவொரு மதிப்பீட்டையும் ஈரான் நிராகரிக்கிறது. இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ஹொசைன் மொஹெப்பி, ‘ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு இராணுவ மோதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக’ புதன்கிழமை (செப்டெம்பர்-30) அன்று அரை அதிகாரப்பூர்வ ஃபார்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

நான்காவது, ஈரான் தனது செல்வாக்கு முழுவதையும் இழக்கவில்லை என்பதற்கு எண்ணெய் விலைகள் மற்றொரு அறிகுறியாகும். வர்த்தகர்கள் மீண்டுவரும் மத்திய கிழக்கு ஏற்றுமதிகளில் கவனம் செலுத்தியதால், செவ்வாயன்று பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 2.6 சதவீதம் சரிந்து 102.59 டாலராகக் குறைந்தது. இருப்பினும், அது செப்டம்பர் மாதத்தில் ஏறக்குறைய 13 சதவீத வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. வெல்த் கிளப்பின் ஸ்ட்ரீட்டர், கச்சா எண்ணெய் வரத்து மேம்பட்டு வந்தபோதிலும், அதன் விலைகளில் புவிசார் அரசியல் இடர் காரணி ஒன்று இன்னும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று கூறினார். ‘இந்தப் பிராந்தியத்தில் செயல்படுவதில் உள்ள அபாயங்கள் குறித்த அச்சத்தின் காரணமாக, எண்ணெய்க் கப்பல்களுக்கான காப்பீட்டுச் செலவுகளும் உயர்ந்தே காணப்படுகின்றன. மேலும், இந்த நீர்வழிப்பாதையில் அதிகமான கப்பல்கள் பயணித்தாலும், இது கச்சா எண்ணெயைக் கொண்டு செல்வதற்கான செலவையும் கூட்டுகிறது’ என்று அவர் கூறினார். மேலும், கச்சா எண்ணெய் புள்ளிவிவரங்கள் முழுமையான உண்மையை வெளிப்படுத்தவில்லை என்று ஸ்ட்ரீட்டர் எச்சரித்தார்.

எனவே, கச்சா எண்ணெய் சீராக்கம் அமெரிக்க இடைத்தேர்தலுக்கான தாக்கமாக அமையுமேயன்றி, நிலையான மாற்றமா என்பதில் சந்தேகங்களே காணப்படுகின்றது. அமெரிக்கா எதிர் ஈரான் போரில் நிலையான தீர்வே கச்சா எண்ணெய் விநியோகத்திற்கான நிலையான மாற்றத்தை உருவாக்கக்கூடியதாகும். கடந்த வாரம் ஈரான் முன்வைத்த சமீபத்திய போர்நிறுத்த முன்மொழிவை நிராகரித்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டின் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்களை நடத்தப்போவதாக ட்ரம்ப் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்;. இருப்பினும், இடைக்காலத் தேர்தல்கள் முடியும் வரை புதிய தாக்குதல்கள் எதுவும் இருக்காது என்றும் அவர் குறிப்பால் உணர்த்தியுள்ளார். மறுபுறம், வேறு வழியின்றி நெருக்கடிக்குள்ளாகியுள்ள ஈரான், இப்பிராந்தியத்திலுள்ள எரிசக்தி நிலையங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தவும், ஹார்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை ஓரளவாவது மீண்டும் தன்வசப்படுத்தவும் முற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மோதல்கள் மீண்டும் தொடங்கினால் நிலைமை இன்னும் மோசமடையக்கூடும். இது ‘வெற்றி இலக்கு எட்டப்பட்டது’ என்று கூறக்கூடிய தருணம் அல்ல.

(நன்றி : தினக்குரல் – 04.10.2026)