குர்திஸ்தான்

இலங்கையில் எங்கட புத்தங்கள் இல்லத்தில் புத்தகம் வாங்கிக் கொள்ள முடியும்.

இந்தியாவில் டிஸ்கவரி புக் பேலஸில் புத்தகம் வாங்கிக் கொள்ள முடியும்.

முன்னுரை

தேசிய இனத்திற்கான விடுதலைப் போராட்டம் என்பது ஒரு ஆள்புல எல்லைக்குள்ளேயோ அல்லது ஒரு சிறு அரசியல் வளையத்துக்குள்ளையோ சுருக்கி விடக் கூடியது அல்ல. மாறாக பரந்த சர்வதேச அரசியல் சுழற்சிக்குள் ஓர் பகுதியாகவே காணப்படுகின்றது. தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கான காரணமும் தீர்வுகளும் சர்வதேச அரசியல் சுழலுக்குள்ளேயே காணப்படுகின்றது என்பதே எதார்த்தமான உண்மையாகும். சர்வதேச அங்கீகாரம் என்பது அத்தகைய எதார்த்தத்தினையே உணர்த்தி நிற்கின்றது. பொதுவாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பல தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டக்களும் சர்வதேச அங்கீகாரம் இன்மையால் தனியரசுக்கான நிலையை பெறமுடியாதுள்ளது. இப்பின்னணியில் விடுதலைக்காக போராடும் தேசிய இனங்கள் சர்வதேச ஒழுங்கை அறிவியல் பூர்வமாய் அறிந்திருத்தல் அவசியமாகிறது. குறைந்தபட்சம் சர்வதேச அரசியலில் தமது பங்காளிகளை அறிந்திருத்தல் வேண்டும். இவ் அடிப்படையில் ஈழத்தமிழர்கள் சமகாலத்தில் இடம்பெறும் விடுதலைப் போராட்டங்களையும், அவர்களது வரலாற்று தடங்களையும் அறிந்து வைத்திருத்தல் தமது பாதையை திட்டமிட பயனுடையதாக அமையும். 2009க்கும் முன்னரான ஈழத் தமிழர் அரசியல் போராட்டத்தில் அத்தகையதொரு பகுதியை அவதானிக்க கூடியதாக காணப்படுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழமறுமலர்ச்சிக் கழகம் அதற்கு ஒரு உதாரணமாக அமைகின்றது. 

‘குர்திஸ்தான்’ எனும் இவ்நூலுருவாக்கத்திற்கான அடிப்படை 2009ஆம் ஆண்டுக்கு முன்னரான தமிழ்த்தேசிய அறிவியல் தள செயற்பாட்டின் பின்புலத்தில் உந்தப்பட்டதாகவே அமைகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மறுமலர்ச்சிக் கழகத்தின் 1985ஆம் ஆண்டு வெளியீடாகிய ‘அயர்லாந்து விடுதலைப் போராட்டம்’ வாசிப்பு ஏற்படுத்திய தாக்கம் அந்நூலுருவாக்கம் மற்றும் மறுமலர்ச்சிக் கழகம் பற்றிய தேடலுக்கான தூண்டலை ஏற்படுத்தியது. மறுமலர்ச்சி கழகத்தின் பயனுறுதி மிக்க அறிவியல் தள செயற்பாடுகள் 2009களுக்கு பின்னர் ஏற்படுத்திய வெற்றிடத்தை சமகால மாணவனாய் உணரக்கூடியதாகவும் அமைந்தது. 

இவ்வாறான எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே 2009களுக்கு பின்னரான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறையின் மாணவனாய், சமகால தேசிய இனங்களின் விடுதலை போராட்டங்களை இயலுமானவரை தொகுத்து, ஈழத்தமிழ் சமுகத்தின் வாசிப்புக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற முடிவு நகர்த்தப்பட்டுள்ளது. அதனோர் விளைவாகவே குர்திஸ்தான் நூல் வடிவம் பெற்றுள்ளது. எதிர்வரும் நாட்களில் ஏனைய வலிமையான தேசிய இனங்களின் விடுதலைப் போராட்ட அரசியல் வரலாறும் இறையாசியுடன் தொகுக்கப்படும்.

இந்நூல் உருவாக்கத்திற்கு எண்ணமாயும் செயலாயும் பலர் செயற்பட்டுள்ளனர். குறிப்பாக, என் எழுத்து பாதை பேராசிரியர் கே. ரீ.கணேசலிங்கம் அவர்களின் நெறிப்படுத்திலிலேயே கட்டமைக்கப்பட்டது.  இந்நூலுருவாக்கத்திலும் என் எழுத்துக்களை செம்மைப்படுத்தி, என் கருத்துகளுக்கு வீரியமூட்டிய என் பேராசிரியருக்கு நிறைவான நன்றிகள். அவ்வாறே இந்நூலுக்கான அணிந்துரை வழங்கியுள்ள என் மதிப்பிற்குரிய சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. தி.விக்னேஸ்வரன் அவர்களுக்கும் நன்றியை பகிர்கிறேன். ஆசானின் அணிந்துரையின் அன்பு என் எழுத்துக்கான பொறுப்பை உணர்த்தி நிற்கிறது. மேலும் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. சி.திருச்செந்தூரன் அவர்களின் ஊக்கமே என் ஒவ்வொரு நூலுருவாக்கத்திலும் உந்துதலாக அமைந்துள்ளது. நிறைவான நன்றிகள் ஆசானுக்கு.

அயர்லாந்து விடுதலைப் போராட்டம் நூலின் ஆசிரியர் மு.திருநாவுக்கரசு (உதயன்) அவர்களுக்கும் நன்றிகள். மேலும் குர்திஸ் பற்றிய தேடலுக்கான உந்துதல், சமுக விஞ்ஞான ஆய்வு மையத்தின் சிறுவெளியீட்டுக்கானதாகவே அமைந்தது. அந்த உந்துதலை வழங்கிய ஆசிரியர் சி.அ.யோதிலிங்கம் அவர்களுக்கும் நிறைவான நன்றிகள்.

இந்நூலிற்கான முகப்பு அட்டையினை வடிவமைத்து தந்த தம்பி ஆனந்தகுமார் வேதாகுலன் மற்றும் அவரது Vital Masks Private Ltd நிறுனவனத்தினருக்கும், புத்தக வடிவமைப்பு மற்றும் அச்சுப்பிரதி செய்துள்ள Discovery book Palace – சென்னை நிறுவனத்தினருக்கும் என்றும் நன்றிகள்.

மேலும், எனது முயற்சிகளை பெரும் சிகரமாய் இரசிக்கும் இறையாகியுள்ள என் அன்னைக்கும், என்னை உயர்த்திவிட்ட தந்தைக்கும், எனை உயர்த்திப் பார்க்கும் சகோதர்களுக்கும் நன்றிகள். 

பல ஜாம்பவான்களை சந்தித்துள்ள எழுத்துலகில், மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கிறேன். இந்நூலூடாக ஆசியாவின் இன்னொரு மூலையில் நான்கு அரசுகளின் ஆள்புல பிடிக்குள்ளும், பிராந்திய-சர்வதேச அரசுகளின் நலன்களுக்குள்ளும், குழுக்களின் அதிகார மோதலுக்குள்ளும் விடுலைக்காக போராடும் ஓர் தேசிய இனத்தின் அரசியல் வரலாற்றை தமிழ் சமுகத்தின் வாசிப்பிற்கு வழங்குகிறேன். வாசகர்களின் கருத்துக்கள் என்னை தொடர்ச்சியாக செப்பனிடுமென்று நம்பிக்கை கொள்கிறேன்.

ஐ.வி.மகாசேனன்
M.A (PolSc) (DU, India.) (R),
MIR (UPDN, Sri Lanka),
BA Hons PolSc (UOJ, Sri Lanka).
25.11.2024