பிராந்தியத்தின் அதிகார சமநிலை; துருக்கியை குர்துக்களை நோக்கி நகர்த்துகிறது!

கடந்த வருடம் (2025) துருக்கியில் வாழும் குர்து மக்களின் விடுதலைப் போராட்டம் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆயுதப் போராட்டத்தை முற்றாக கலைப்பதற்கு இணக்கம் தெரிவித்ததது. துருக்கு குர்துக்களின் ஆயுதப் போராட்ட அமைப்பாகிய குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பி.கே.கே) ஆயுதங்களை களைந்து நிராயுதபாணியாக்கம் செய்யப்பட்டனர். பி.கே.கே தொடர்ச்சியாக ஜனநாயக அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக தெரிவித்திருந்தது. எனினும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள், ஏர்டோகன் தலைமையிலான துருக்கி அரசாங்கத்தால் குர்துக்கள் ஏமாற்றப்பட்டனர் என்ற விமர்சனத்தையே முன்வைத்தனர். ஏர்டோகன் அரசாங்கம் 2028ஆம் ஆண்டு தேர்தலை இலக்கு வைத்து இயங்குவதாக குறிப்பிடப்பட்டது. பி.கே.கே போராளிகள் இயல்பாக்கப்படுவதில் தொடர்ச்சியான கால இழுத்தடிப்புக்களும் அதனை உறுதிப்படுத்துவதாகவே அமைந்தது. இந்நிலைiயிலேயே ஓராண்டு இடைவெளியில் துருக்கி-குர்து சமாதான நடவடிக்கைகள் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் முன்னகர்த்தப்பட்டுள்ளது. இக்கட்டுரையும் துருக்கி-குர்து சமாதானத்தின் துருக்கியின் அரசியல் நலன்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 10 அன்று, குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் (பி.கே.கே) படைகளைக் கலைத்த போராளிகளுக்கு வரையறுக்கப்பட்ட பொது மன்னிப்பு வழங்கும் மசோதாவை துருக்கி நாடாளுமன்றம் நிறைவேற்றியது. 1984 முதல் துருக்கிய அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியை நடத்தி வந்த பி.கே.கே சிறையில் உள்ள அதன் நிறுவனர் அப்துல்லா ஒகலானின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு (2025) 2025 மே மாதம் கலைக்கப்பட்டு, ஜூலை 11அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயுதக் களைவு செயல்முறையைத் தொடங்கும் விதமாக பி.கே.கே போராளிகள் பெரிய தீக்குழியில் தங்கள் ஆயுதங்களை அடையாளப்பூர்வமாக எரித்தனர். அதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளியில் போராளிகளுக்கு வரையறுக்கப்பட்ட பொது மன்னிப்பு வழங்கும் சட்டத்தை துருக்கிய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. வரும் மாதங்களில், நூற்றுக்கணக்கான பி.கே.கே உறுப்பினர்கள் இந்த புதிய சட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளவும், தாங்கள் ஆயுதம் ஏந்துவதற்காக விட்டுச்சென்ற நாட்டிலேயே மீண்டும் ஒன்றிணையவும் துருக்கிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சிறைப்படுத்தப்பட்டுள்ள பி.கே.கே தலைவர் ஒகலான் பொதுமன்னிப்பில் சேர்க்கப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. எனினும் ஒகலான், ‘இந்த மசோதாவானது துருக்கி குடியரசு நிறுவப்பட்டதைப் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஜனநாயகமயமாக்கல் செயல்முறைக்கு வழிவகுக்கிறது’ என்று பாராட்டியுள்ளார்.

பல தசாப்தங்களாக, துருக்கியின் முழுமையான ஜனநாயகமயமாக்கலுக்கும் குர்து மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கும் ஒரு அமைதியான தீர்வு காண்பது இன்றியமையாததாகும். ஆயினும், கடந்த மாதத்தின் இந்த முன்னேற்றம், துருக்கிய ஜனநாயகத்தின் மிகவும் வெளிப்படையான ஆதரவாளர்கள் சிலரிடமிருந்து பரவலான விமர்சனங்களைச் சந்தித்தது. துருக்கி-குர்து சமாதான நடவடிக்கை, தனது சர்வாதிகார ஆட்சியைத் தொடர்வதற்காக குர்துகளின் ஆதரவைப் பெறுவதற்கு துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் கையாளும் ஒரு வஞ்சகமான சூழ்ச்சியாகும் என்பதாகும். மேலும், அரசாங்கம் உண்மையில் வாக்குறுதிகளை நிறைவேற்றி, நாட்டின் குர்துகளுக்கு உண்மையான அரசியல் சலுகைகளை வழங்குமா என்றும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

சிரியாவில் உள்ள குர்திஸ்தான் ஜனநாயக அமைதிக் கட்சியின் தலைவர் தலால் முகமது, ஆயுதமேந்திய குர்திஷ் குழுக்கள் தொடர்பான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர துருக்கி முயன்று வருவதாக முகமது எச்சரிக்கிறார். இந்தப் பிராந்தியம் முழுவதிலும் பி.கே.கே தான் மிக முக்கியமான குர்து குழு என்றும், அது சிரியாவில் உள்ள குர்துகளின் விவகாரங்களைப் பாதிக்கிறது என்றும் முகமது விளக்குகிறார். ‘எஸ்.டி.எப் (சிரியா ஜனநாயக படைகள்) மற்றும் பி.கே.கே-வை முடிவுக்குக் கொண்டுவருவது ஒரு துருக்கியக் கனவும், ஒரு பெரிய துருக்கியத் திட்டமும் ஆகும்’ என்று அவர் கூறினார். இச்சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையிலேயே பி.கே.கேயின் தலையீட்டுடன் சிரியாவில் குர்து மக்களின் விடுதலைக்காக போராடிவரும் சிரிய ஜனநாயகப் படைகளின் பின்வாங்கலும், ஈரானில் சற்று வலுக்கும் குர்து மக்களின் விடுதலைப் போராட்டத்தில் பி.கே.கே-யின் தலையீடுகள் தொடர்பான செய்திகளையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

எர்டோகனின் பி.கே.கே உடனான சமாதானமும் குர்து ஆயுதப் படைகளின் கலைவுக்கான உந்தலும், உள்நாட்டு அரசியல் ஆதாயத்தை மாத்திரம் இலக்கு வைப்பதாக அமைவதில்லை. துருக்கி-பி.கே.கே சமாதான முன்னெப்புகளின் உந்துசக்திகள் துருக்கியின் எல்லைகளுக்கு அப்பாலும் காணப்படுகின்றன. இதில் புவிசார் அரசியல் நகர்வுகளையும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் விளக்குகின்றனர். 2023 அக்டோபர்-7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் தொடங்கி, ஹிஸ்புல்லாவின் அழிவு, 2024 டிசம்பரில் சிரியாவில் அசாத் ஆட்சியின் வீழ்ச்சி, மற்றும் ஈரானுடனான தற்போதைய போர் எனத் தொடர்ந்த ஒரு தொடர் நிகழ்வுகளாகும்.

ஒன்று, ‘அசாத் ஆட்சியின் வீழ்ச்சியானது, நாங்கள் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா மீது தொடுத்த அடிகளின் நேரடி விளைவாகும்,’ என்று அப்போதைய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். மேலும் துருக்கியில், தீவிர தேசியவாத தேசியவாத இயக்கக் கட்சியின் தலைவரும் எர்டோகனின் கூட்டணிக் கட்சியாளருமான டெவ்லெட் பஹ்செலியும் ‘காசாவில் தொடங்கிய தீ லெபனானுக்குப் பரவி, சிரியாவின் மீது தன் நிழலை விரித்து, ஈராக்கை அடைந்து, இறுதியில் ஈரானின் இதயத்தையே ஊடுருவிய ஒரு அதிர்ச்சி அலையை உருவாக்கியது’ என்ற எச்சரிக்கையை வெளிப்படுத்தினார். 2024 அக்டோபரில், அசாத்தை வீழ்த்திய கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்குச் சற்று முன்பு, எர்டோகன் துருக்கிய நாடாளுமன்றத்தின் தொடக்க விழாவில், ‘இஸ்ரேலின் அடுத்த இலக்கு துருக்கியாக இருக்கும்’ என்ற சுய எச்சரிக்கையை வழங்கியிருந்தார். தொடர்ந்து உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் எர்டோகன் அழைப்பு விடுத்தார்.

இரண்டு, துருக்கிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய குர்து மக்கள் தொகையைக் கொண்ட நாடாக ஈரான் காணப்படுகின்றது. சமகாலத்தில் ஈரான் போரில் குர்து மக்கள் ஆதரவு படைகள் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுடன் கைகோர்க்கும் எச்சரிக்கைகள் துருக்கி அரசாங்கத்திடம் காணப்படுகின்றது. இதற்கு வரலாறுகளும் காணப்படுகின்றது. 2003ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஈராக் மீதான தாக்குதலுக்கு வலுவான சக்தியாக ஈராக் நிலத்தில் வாழும் குர்து படைகள் காணப்பட்டது. பின்னாளில் ஈராக்கில் குர்திஸ்தான் தன்னாட்சி பிராந்தியமும் நிறுவப்பட்டது. 2011ஆம் ஆண்டு சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான அமெரிக்கப் போரிலும் சிரியா நிலத்தில் வாழும் குர்து படைகளே முதன்மை நிலையை பெற்றது. அதனைத் தொடர்ந்து அங்கிகரிக்கப்படாத ரோஜாவா எனும் தன்னாட்சி பிராந்தியத்தை நிறுவிக் கொண்டது. நீண்டதொரு இடைவெளியில் 2026ஆம் ஆண்டு ஈரான் நிலப்பரப்பில் அமெரிக்கப் போரில் குர்துகள் மீண்டும் ஒருமுறை மைய இடத்தைப் பிடிக்கத் தயாராக இருப்பது போல் தோன்றியது. அமெரிக்க ஜனாதிபதியின் முரணான செய்திக்குறிப்புகள் ஒன்றில் ஈரான் மீதான போருக்கு குர்துக்களை அழைப்பு விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய வரலாற்று அனுபங்களின் தொகுப்புடனேயே ஈரான் மீதான அமெரிக்கப் போரை துருக்கி அவதானிக்கின்றது. பிராந்தியக் கொந்தளிப்பு, ஈரானில், குர்துகளின் சுயாட்சியையோ அல்லது அரசியல் செல்வாக்கையோ வலுப்படுத்தி, அதன் விளைவுகள் இறுதியில் துருக்கிக்குள்ளும் எதிரொலிக்கக்கூடும் என்பதும் துருக்கி அரசாங்கத்தின் முக்கிய கவலையாக இருந்தது. இப்பின்னணியும் பி.கே.கே உடனான துருக்கி அரசாங்கத்தின் சமாதான நகர்வுகளை முன்னகர்த்தியுள்ளது. ஈரானில் உள்ள முதன்மையான குர்து படையான குர்திஸ்தானின் சுதந்திர வாழ்வு கட்சி பி.கே.கே உடன் நெருங்கிய உறவை பேணுகின்றது. தங்கள் தலைவராகவும் பி.கே.கே-யின் தலைவரான அப்துல்லா ஒகலானையே கருதுகின்றது. இந்நிலையிலேயே ஈரான் சூழலை முன்கூட்டியே சமாளிக்கும் முயற்சியில் துருக்கிய அரசாங்கம், ஓசலானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியது.

மூன்று, இஸ்ரேல் குர்து சக்திகளுடன், மீண்டும் குறிப்பாக சிரியா மற்றும் ஈரானில், தனது உறவுகளை ஆழப்படுத்திக்கொள்ளும் சாத்தியம் அவதானிக்கப்படுகிறது. இந்நிலைமை பிராந்தியத்தில் துருக்கியின் அதிகார சமநிலையை சீர்குலைக்கக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. துருக்கி அரசாங்கத்தின் கண்ணோட்டத்தில், நெருங்கிய இஸ்ரேலிய-குர்திய உறவுகள், துருக்கியின் சொந்த உள்நாட்டு சவால்களைச் சிக்கலாக்கும் விதத்தில் குர்திய இயக்கங்களுக்கு வலுவூட்டுவதோடு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் துருக்கி-இஸ்ரேல் பிராந்தியப் போட்டியில் இஸ்ரேலின் செல்வாக்கையும் திறன்களையும் மேம்படுத்துவதன் மூலம் பிராந்திய அதிகாரச் சமநிலையையும் மாற்றியமைக்கும். கடந்த ஆண்டு சிரிய குர்திய அதிகாரிகள் இஸ்ரேலிய அதிகாரிகளைச் சந்தித்ததாகப் பரவலாகச் செய்திகள் வெளியானது. துருக்கி ஹமாஸை வழக்கமாக உபசரிக்கிறது. அவ்வாறே ஆனால் இஸ்ரேல் குர்து படைகளை உபசரிக்கும் அச்சத்தை துருக்கி அரசாங்கம் முன்வைக்கின்றது.

நான்கு, இந்தப் புவிசார் அரசியல் சூழல்களுக்கு மத்தியில், எர்டோகனின் உள்நாட்டு அரசியல் நலன்களும் மிகவும் சிக்கலான ஒரு பங்கை வகிக்கின்றன என்பது எதார்த்தமானதேயாகும். ஆரம்பத்தில் துருக்கிய நாடாளுமன்றத்தின் சபாநாயகரும், எர்டோகனின் நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சியின் மூத்த தலைவருமான நுமான் குர்துல்முஸ், துருக்கிய தேசியவாத மற்றும் இஸ்லாமிய மரபுகளில் காணப்படும் ஒரு பழக்கமான சதிக்கருத்தின் மூலம், ‘பெரிய இஸ்ரேல் என்று அழைக்கப்படும் திட்டத்தில், உள்வாங்கப்பட வேண்டிய முதன்மை சக்தியாக துருக்கி பார்க்கப்படுகிறது’ என்ற பிரச்சாரத்தை சமாதான முன்னெடுப்பின் அவசரத்திற்கு விளக்கினார். இது ஒருவகையில் சதிக்கோட்பாடாகவே அவதானிக்கப்பட்டது. எனினும் 2025இல் ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ மூலம் ஈரானில் அமெரிக்காவின் நேரடி ஈடுபாடு, துருக்கியின் புவிசார் அரசியல் கவலையை நிஜமாகியிருந்தது. எனினும் தொடர்ச்சியான எர்டோனின் உள்நாட்டு அரசியல் நலன் பற்றிய கவலைகள் துருக்கி-குர்து சமாதான முன்னெடுப்புக்களில் நிலைப்பை உறுதிப்படுத்த தடையாகவே உள்ளது. அவர் தனது அடுத்த பதவிக்காலத்திற்கு குர்துகளின் ஆதரவைப் பெற இறுதியில் நம்பினாலும், பி.கே.கே அல்லது குர்து இயக்கத்திற்கு அளிக்கப்படும் எந்தவொரு சலுகையும் கடுமையான தேசியவாத எதிர்ப்பை எதிர்கொள்ளும் அபாயத்தையும் கொண்டுள்ளது. இந்தச் செயல்முறையைத் துருக்கிய தேசியவாதிகள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்பது குறித்தும், அவர் நம்பியிருக்கும் குர்துகளின் ஆதரவு அடுத்த தேர்தலில் வெற்றிபெறப் போதுமானதாக இருக்குமா என்பது குறித்தும் எர்டோகன் தொடர்ந்து உறுதியற்றவராகவே காணப்படுகிறார். இவ்உறுதியற்ற நிலையே குர்துகள் ஏமாற்றப்படுகிறார்களா என்ற சந்தேகங்களையும் சர்வதேச அரசியல் ஆய்வாரள்களிடையே எழுப்புகின்றது.

எனவே துருக்கியின் குர்துகளுடனான சமாதான முன்னெடுப்பில், பிராந்திய மோதல்களும் அதில் புதைந்துள்ள துருக்கியின் அதிகார சமநிலைக்கான சவால்களும் ஆழமான செல்வாக்கை செலுத்துகின்றது. எனினும் முரண்படும் எர்டோகனின் உள்நாட்டு அரசியல் நலன் சமாதான முன்னெடுப்பை எத்திசையில் கொண்டு செல்லும் என்ற அச்சத்தையே தொடர்ச்சியாக பேணுகின்றது. ஜனநாயகத்தின் அளவில் ஏற்படும் ஒரு சரிவைத் தொடர்ந்து, ஏறக்குறைய அதே அளவிலான ஒரு அதிகரிப்பு ஏற்படும் நிலையைக் குறிக்கும் ஒரு விளக்கப் பெயரே ‘திடீர் நிலைமாற்றம்’ (U-Turn) ஆகும். நடைமுறையில், இதன் பொருள் என்னவென்றால், ஒரு ஜனநாயகமற்ற ஆட்சி, ஜனநாயகமற்றதாகவே இருந்துகொண்டு, ஒரு ஜனநாயக மாற்றத்தை வெளிப்படுத்த முடியும். எர்டோகனின் குர்துக்களுடனான அமைதி முன்னெடுப்புகள் அத்தகைய கண்ணோட்டத்திலேயே அவதானிக்கப்படுகின்றது. இந்நிலைமையில் அமைதி ஜனநாயகமயமாக்கலாகுமா என்பது வலுவாக சந்தேகங்களையே மீதப்படுத்துகிறது.

(நன்றி : தினக்குரல் – 13.09.2026)