சி.அ.யோதிலிங்கம்; நிறைவான அரசியல் போராளி!
தமிழ்த்தேசிய அரசியலின் அண்மைக்கால போக்குகள் பெரிதும் வன்மங்கள் நிறைந்ததாகவே காணப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக சமூக வலைத்தள யுகத்தில் அதன் நெருக்கடிகள் உயர்வானதாகவே அமைந்துள்ளது. பொதுவாகவே அரசியல் என்பது சாக்கடை எனும் விமர்சனப் பார்வை பொதுவெளியில் உண்டு. அதேவேளை தமிழ்த்தேசிய அரசியல்ப் பரப்பில் நிறைந்துள்ள சமூக வலைத்தள முரண்பாடுகளும் வன்மப் பதிவுகளும், பல தேசிய ஆர்வலர்களையும் புறமொதுங்கும் நிலைகளை உருவாக்கியுள்ளது. இந்நிலைமைகளை சகித்துக் கொண்டு, இருமை எதார்த்தத்துக்குள் தமிழ் மக்களின் நலன் மற்றும் தமிழ்த்தேசியத்தின் மீது கொண்ட பற்றுறுதியில் தளர்வடையாதவர்களை தமிழ் மக்கள் என்றும் புகழ் உச்சியில் கொண்டாட தவறியதில்லை. இதனை மீண்டுமொரு முறை மறைந்த அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி, அரசியல் ஆசிரியர் என பன்முகங் கொண்ட அரசியல் போராளி சி.அ.யோதிலிங்கம் அவர்களின் மறைவிற்கான இரங்கல்கள் உறுதி செய்கின்றது.
சமூக வலைத்தள வன்ம உலகிற்கு வெளியே பரந்ததொரு உலகம் உண்டு என்பதையும், அவ்உலகில் தமிழ்த்தேசிய வாழ்வியலுக்கு சரியான அங்கீகாரம் உண்டு என்பதையும் சி.அ. யோதிலிங்கம் அவர்களின் மறைவை தொடர்ந்தான செய்திகள் வெளிப்படுத்தி உள்ளது. இது புறமொதுங்கும் பல தமிழ்த்தேசிய ஆர்வலர்களையும் மீள ஒருங்கிணைக்க வழி ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டுரை சி.அ யோதிலிங்கம் அவர்களின் தமிழ்த்தேசிய அர்ப்பணிப்பை நினைவு கூர்வதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
கார்ள் மார்க்ஸ், ‘ஒட்டுமொத்த சமூகமும் மேலும் மேலும் இரண்டு பெரும் பகை முகாம்களாக, அதாவது நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் இரண்டு பெரும் வர்க்கங்களாகப் பிளவுபட்டு வருகிறது. அவைதான் முதலாளி வர்க்கம் மற்றும் பாட்டாளி வர்க்கம்’ என சமூகத்தில் நிலைபெற்றிருக்கும் இருமையை பிரெடெரிக் எங்கெல்ஸும் இணைந்து 1848இல் எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ (The Communist Manifesto) என்ற நூலில் பதிவு செய்துள்ளார். இதில் சமூகத்தில் எத்தனை விதமான முரண்பாடுகளும் வர்க்கப் பிரிவுகளும் இருந்தபோதிலும், முதலாளித்துவத்தின் உச்சகட்டச் செயல்பாட்டுப் புள்ளியில் அவை இரண்டு முக்கிய எதிரெதிர் அணிகளாகவே (வர்க்கங்களாக) பிளவுபடுகின்றன என்பதை அவர் விளக்குகிறார். கார்ள் மார்க்ஸின் இக்கருத்தாடல், முரண்பாடுகள் ஆயிரமாக இருப்பினும் அவை ஒரு செயற்பாடு புள்ளியில் இரண்டு அணிகளாக மட்டும் பிளவுபடும் என்ற பொதுமையையே உறுதி செய்கின்றது.
இவ்இருமை சார்ந்த பொதுவான எதார்த்தத்துக்குள் சி.அ. யோதிலிங்கம் அவர்கள் தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய கொள்கை மற்றும் மக்களுக்கான அரசியல் என்பதில் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். காட்சிகள் மற்றும் கட்சி முகாம்கள் மாறுபட்டடிருக்கலாம் எனினும் அவையாவும் தாம் வரித்துக் கொண்ட தமிழ்த்தேசிய கொள்கையை பாதுகாக்கவும் மக்களுக்கான விடுதலை அரசியலை ஈடேற்றுவதற்குமாகவே அமைந்துள்ளது. யோதிலிங்கம் அவர்களின் இரங்கல் உரையில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் அவர்கள் குறிப்பிட்ட விடயத்தை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக அமையும்:
''ஜோதி ரமணியாக இருந்தபொழுது எந்த நம்பிக்கைகளைப் பிரதிபலித்தார், பின்னர் முத்துக்குமார் என்ற பெயரில் பொங்குதமிழ் இணையத்தில் எழுதியபொழுது எந்த நம்பிக்கைகளை வலியுறுத்தினார், கடந்த 17 ஆண்டுகளாக எவ்வாறு வாழ்ந்து வந்தார் என்பவற்றைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது—அவர் எந்தக் கட்சியோடு நின்றார், எந்த இயக்கத்தோடு நின்றார், யாருக்கு எதிராக எழுதினார், யாரை ஆதரித்தார், எந்த அரசியலை வலியுறுத்தினார் என்பதெல்லாம் இங்கு முக்கியமல்ல. இங்கே முக்கியம் என்னவென்றால், அவர் எப்பொழுதும் தன் மக்களோடு நின்றார். தன் மக்களின் துன்பங்களோடு நின்றார். தன் மக்களின் கூட்டுக் காயங்களைப் பிரதிபலித்தார். தன் மக்களுக்காகத்தான் அவர் எழுதினார். ஒரு நபர் பண்புருமாற்றத்தின் பக்கம் நிற்கிறார் என்பதற்கான பிரதான அளவுகோல் அதுதான். அவர் எப்பொழுதும் மக்களோடு நின்றார். மக்களோடு நின்றது ஜோதி. அவர் மக்களின் துன்பங்களை எப்பொழுதும் பிரதிபலித்தார். எந்த இயக்கத்தை, எந்தக் கட்சியை அவர் ஆதரிக்கிறார் என்பதல்ல பிரச்சனை. யாரோடு நின்றாலும் மக்களோடு நிற்பார். மக்களின் குரலை எதிரொலிப்பார். அதுதான் ஜோதிலிங்கம். மக்களோடு நிற்கும் பொழுது ஜோதி இயல்பாகவே, தர்க்கபூர்வமாகவே அரசுக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக நிற்பார். ஜோதி எப்பொழுதும் அரசுக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக நின்றார். அது முக்கியம்''
சி.அ. யோதிலிங்கம் அவர்களின் வாழ்க்கை பயணங்கள் குறிப்பாக 16 வயதில் சிறுவனாக ஆரம்பித்த தமிழ்த்தேசியத்துக்கான பயணம், பதின்ம வயதில் பல்கலைக்கழக காலத்தில் மாணவர் பேரவையில் ஈடுபாடு, ரமணியாக போராளி வடிவம், கொழும்பில் அரசியல் ஆசிரியராக இன்று அடையாளப்படுத்தக்கூடிய எழுத்தாளர் என்.சரவணன் போன்றவர்களுக்கான அரசியல் ஆதாரம், முத்துக்குமாராக பொங்குதமிழ் இணையத்தில் கருத்துருவாக்கி, தொடர்ச்சியாக யோதிலிங்கம் என்ற பெயருடனேயே கருத்துருவாக்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநர் என நீண்ட அனுபவத்தையும் செயற்பாட்டையும் கொண்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக அனைத்து தமிழ்ப் பத்திரிகைகளிலும் அவரது அர்ப்பணிப்பான தமிழ்த்தேசியப் பயணம் பல கோணங்களில் விபரிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டுரை, இப்பத்தி எழுத்தாளரை யோதிலிங்கம் அவர்களுடன் இணைத்த அவரது அரசியல் ஆசிரியராய் தமிழ்த்தேசியத்துக்கு வழங்கியுள்ள பணியை நினைவு கூருவது பொருத்தமானதாக அமையும்.
முதலாவது, தமிழ் அரசியல் சார்ந்த விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். 2015/2016ஆம் ஆண்டுகளில் தமிழ்த்தேசியப் பேரவை தமது அலுவலகத்தில் அரசியல் வகுப்புக்கான ஏற்பாடுகளை ஒழுங்குபடுத்தியிருந்தது. அதில் ‘தமிழ் அரசியலின் இலக்கும் வரைபடமும்’ என்பதை முதன்மைப்படுத்தி யோதிலிங்கம் அவர்கள் கற்பித்தார்கள். குறிப்பாக தமிழ் மக்களின் இலக்கு, ‘தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது இனவழிப்பிலிருந்து பாதுகாப்பதாக இருக்க வேண்டும். அதற்கு கோட்பாட்டு ரீதியாக தமிழ் மக்களை ஒரு தேசமாக அல்லது தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும். தமிழ் மக்களின் இறைமையும் அதன் அடிப்படையிலான சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்பட வேண்டும். இச்சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பதற்கான அரசஅதிகாரக் கட்டமைப்பு உருவாக்கப்படல் வேண்டும். இக்கட்டமைப்பு உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டிக்கட்டமைப்பாக இருத்தல் வேண்டும்’ என அடையாளப்படுத்திக் கொண்டார். இவ்இலக்குக்கான வழிவரைபடமாக ‘தேசிய அரசியல் இயக்கத்தினை உருவாக்குதல்; புவிசார் அரசியலில் தமிழ் மக்கள் பங்காளிகளாக மாறுதல்;; சமூகமாற்ற அரசியலுக்கும் முக்கியத்துவம் கொடுத்தல்; அடிப்படைச் சக்திகளையும், சேமிப்புச் சக்திகளையும் நட்புச் சக்திகளையும் தமிழ்த்தேசிய அரசியலுக்குப்பின்னால் அணி திரட்டுதல்; மக்கள் பங்கேற்பு அரசியலை தொடங்கி வைத்தல்; சர்வதேச சமூகத்தை எமக்கு சார்பாக திருப்புதல்; தமிழ்மக்களுக்கென ஒரு உத்தியோகபூர்வமற்ற அதிகாரக்கட்டமைப்பை உருவாக்குதல்; கிழக்கைப் பாதுகாப்பதற்கு தனியான கொள்கைத் திட்டமும் வேலைத்திட்டமும் வகுக்கப்படல்’ என எட்டு அம்சங்களையும் வலியுறுத்தியிருந்தார். இக்கருத்தை அரசறிவியல் ஆசிரியராய் மாணவர்களுக்கு விழிப்பூட்டுவதுடன், மாணவர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் கருத்துக்களின் பொருத்தப்பட்டாலிருந்து தமிழ் அரசியலின் இலக்கு மற்றும் வழிவரைபடைத்தை செழுமைப்படுத்தியும் கொண்டார்.
இரண்டாவது, யோதிலிங்கம் அவர்கள், அரசியல் ஆசிரியராய் அடுத்த தலைமுறைகளுக்கு தமிழ்த்தேசிய அரசியலின் பயணத்தை தொடர்ச்சியாக கொண்டு சேர்த்து வந்துள்ளார். ஆசிரியராய் புதிய தலைமுறையுடன் ஒருங்கிணைந்து பயணிக்க கிடைக்கும் சந்தர்ப்பங்கள் யாவற்றையும் முழுமையாக தமிழ்த்தேசிய அரசியல் விழிப்புணர்வை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதில் தெளிவான இலக்கை கொண்டிருந்தார். இலங்கையில் கல்வி செயற்பாட்டை முதன்மைப்படுத்தி இயங்கும் தன்னார்வ இளையோர் அமைப்பாகிய சிறகுகள் அமையத்துடன் யோதிலிங்கம் அவர்கள் நெருக்கமான உறவை கொண்டிருந்தார். சிறகுகள் அமையத்தின் கல்வி, அரசியல் விழிப்புணர்வு மற்றும் இளைஞர் செயற்பாடுகளுடன் நீண்டகாலமாக நெருக்கமான தொடர்பைப் பேணிவந்துள்ளார். 2020ஆம் ஆண்டு சிறகுகள் அமையத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘அடிப்படை அரசியல் பயிற்சிப் பட்டறையில்’ வளவாளராகப் பங்கேற்று இளைஞர்களுடன் தனது அரசியல் அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். 2023ஆம் ஆண்டு மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகால வரலாற்றை முன்னிறுத்தி, யாழ்ப்பாணத்தில் சிறகுகள் அமையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘மலையகம் 200’ உரையாடல் நிகழ்விலும் வளவாளராகப் பங்கேற்றார். மேலும், சிறகுகள் அமையத்தின் ‘திசையறி’ செயற்றிட்டத்தின் ஊடாகப் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்ட ‘இனப்பிரச்சினை என்றால் என்ன?’ என்ற அமர்விலும் அரசியல் குறித்த அடிப்படைப் புரிதல்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார். அவ்வாறே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறையில் வருகை விரிவுரையாளராக இலங்கை அரசியலை தனது அனுபவத்தினூடாக வகுப்பறை கட்டமைக்கப்பட்ட விரிவுரைகளுக்கு வெளியே அறிவை வழங்கி இருந்தார். மேலும் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் அவர்களுடன் இணைந்து அரசறிவியல் துறை விரிவுரையாளர்களை ஒருங்கிணைத்து ‘இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்கள்’ எனும் தொடர் கருத்தரங்கை நடாத்தியிருந்தார்.
மூன்றாவது, யோதிலிங்கம் அவர்களது ஆசிரியர் பணியில் தேசியத்துக்கான சேவையில் அரசியல் கருத்தை அழுத்தமாக தெரிவிப்பது முதன்மையானதாகும். அவர் கடந்து வந்த போராளிக் குணமும் அதற்கொரு காரணமாகும். தமிழ் மக்களை ‘தேசிய இனமாகவே’ விழிக்க வேண்டுமென அறிவியல்பூர்வமாக பல தளங்களில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களுக்கான அரசியலை செய்வதாக கூறும் பல அரசியல் தலைவர்களும் தமிழ் மக்களை ‘சிறுபான்மை இனமாகவே’ பொதுவெளியில் பொதுவாக விழிப்பதுண்டு. இதனை அரசியல் ஆசிரியராய் பல தளங்களில் கண்டித்து அரசியல்வாதிகளின் உரையாடலை திருத்தியுள்ளார். தமிழ் மக்களே தம்மை சிறுபான்மையாக குறிப்பிடுகையில், பெரும்பான்மையின் ஒடுக்குமுறையை ஏற்பதாக அமைந்து விடுகின்றது. அத்துடன் பேரினவாதம் தமிழ் மக்களின் தேசிய அடையாளத்தை மறுதளிக்கும் சூழலில், தமிழ் மக்களும் தேசிய இனம் என்பதை தவிர்த்து சிறுபான்மை இனமாக விழிப்பது, பேரினவாத ஒடுக்குமுறையை ஆதரிப்பதாகவே அமையும். இத்தகைய அறிவியல் விழிப்புணர்வை முன்னிறுத்தி தமிழ் மக்களை தேசிய இனமாகவே விழிக்க வேண்டுமென யோதிலிங்கம் அவர்கள் தொடர்ச்சியாக உரக்க குரல் கொடுத்தார். தனது வகுப்பறைகளுக்குள்ளும் மாணவர்களுக்கு இத்தகைய விழிப்புணர்வை வழங்கியுள்ளார்.
நான்காவது, யோதிலிங்கம் அவர்களது சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தினால் வெளியிடப்படும் அரசியல் சிந்தனை நூல்வரிசை அரசியல் விழிப்புணர்வுக்கான ஆதாரமாக அமைகின்றது. மரணிக்கும் வரையில் ஏறத்தாழ 34 கையேடுகளை வெளியிட்டுள்ளார். சமகால பிரச்சினைகள் மற்றும் ஈழத்தமிழரசியல் கருத்தியல்களின் தொகுப்பாக அரசியல் சிந்தனை நூல்வரிசை அமையப்பெற்றுள்ளது. பெரும்பாலான வெளியீடுகள் யோதிலிங்கம் அவர்களின் சொந்த ஆக்கமாகவே உள்ளது. காலத்தின் தேவை கருதி குறித்த பிரச்சினை தொடர்பில் ஆழ்ந்த தொடர்பு மற்றும் புலமையுடையவர்களை கொண்டும் அரசியல் சிந்தனை நூல்வரிசை கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. யோதிலிங்கம் அவர்கள் எப்பொழுதும் பொதுவெளியில் துணிப் பையும் கழுத்துமாகத்தான் காட்சி தருவார். அந்தத் துணிப் பைக்குள் சில அரசியல் சிந்தனை நூல் வரிசைககள் கையேடு இருக்கும். சந்திப்பவர்களுக்கு அதனை கொடுப்பார். அவரை சந்திக்க அவருடைய அலுவலகம் செல்பவர்களுக்கும் அக்கையேடு கொடுக்கப்படும். எண்பது தொன்னூறுகளில் தமிழ்த்தேசியம் எழுச்சியுற்ற காலப்பகுதியில் மறுமலர்ச்சி கழகம் போன்ற பல அமைப்புக்களால் இத்தகைய அரசியல் சிந்தனை கையேடுகள் உருவாக்கப்பட்டது. ஆனால் 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான சூழலில் யோதிலிங்கம் அவர்கள் அரசியல் விழிப்புணர்வு மற்றும் அறிவூட்டலுக்கான அமைப்புக்களின் செயற்பாட்டை தனிமனிதனாக மேற்கொண்டிருந்தார்.
எனவே, இரங்கல் உரையில் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் அவர்கள் குறிப்பிட்டது போல் யோதிலிங்கம் அவர்கள், ஷஷஉண்மையில் முரண்பாடுகள் மத்தியில், அது சமூக விடுதலையாக இருக்கலாம், அரசியல் விடுதலையாக இருக்கலாம், அந்த முரண்பாடுகளின் மத்தியில் ஒரு தனித்துவமான காத்திரமான ஒரு அரசியல் போராளியாக தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்த ஒரு மனிதன்.” அவர் தமிழ்த் தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத பக்கங்களை உருவாக்கி மறைந்துள்ளார். சி.அ. யோதிலிங்கம் என்ற உருவம் இனி எங்கள் மத்தியில் இல்லை; ஆனால் அவர் அடுத்த தலைமுறையினருக்கு வழங்கி சென்றுள்ள அரசியல் விழிப்பு மற்றும் அறிவூட்டல் எங்கள் மத்தியில் தாக்கமிகு சக்தியாக அமையும்.
(நன்றி : தினக்குரல் – 18.10.2026)
