காசா, ஈரான் போர்களை தொடர்ந்து மூன்றாம் ஆண்டில் ஏமன் போராக வடிவம் பெறுகிறதா!
சில யுத்தங்களின் முடிவு என்பது வெறுமனவே எதிர்பார்ப்பாகவே அமைகின்றதன்றி, நிலையான தீர்வை நோக்கி நகர்த்த முடிவதில்லை. அத்தகையதொரு யுத்தமே மேற்காசிய நிலப்பரப்பினை சூழ்ந்துள்ளது. 2023ஆம் ஆண்டு இறுதி காலாண்டு பகுதியில் (ஒக்டோபர்-07) காசா நிலப்பரப்பில் ஹமாஸ் எதிர் இஸ்ரேல் என ஆரம்பிக்கப்பட்ட சமகால யுத்தத்தின் ஆரம்பம், பல்வேறுபட்ட அரசுகள் மற்றும் அமைப்புக்கள் நிழல் பிரதிநிதிகளாகவும் நேரடியாகவும் ஈடுபட்டு யுத்தத்தின் பரிணாமம் நீண்டு கொண்டே செல்கின்றதன்றி, ஒரு நிலையான முடிவை உருவாக்க முடியவில்லை. காசா போர், ஈரான் போராகி, சமகால நிகழ்வுகள் ஏமன் போராக மாறும் தன்மையையே அடையாளப்படுத்துகின்றது. ஏமன் கிளர்ச்சிப் படையான ஹவுதி, சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. இக்கட்டுரை சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி மற்றும் ஹவுதி கிளர்ச்சி படைக்கு இடையிலான போர் தாக்கத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஈரானுடன் இணைந்த குழுவான ஹவுதி, செப்டெம்பர்-08அன்று பிற்பகல், சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாகவும், அந்த ஏவுகணை தனது இலக்கை வெற்றிகரமாகத் தாக்கி சேதத்தை ஏற்படுத்தி, விமானப் போக்குவரத்தை சீர்குலைத்ததாகவும் ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ தெரிவித்தார். ரியாத்தில் பல வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், அதில் ஒன்று நகரின் விமான நிலையத்தில் நிகழ்ந்து விமானப் போக்குவரத்தை நிறுத்தியதாகவும் நேரில் கண்டவர்கள் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசாங்கத்திற்காகப் போரிடும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி, ஏமனின் ஹவுதி கிளர்ச்சி அமைப்பினால் சவூதி அரேபிய நகரங்களை நோக்கி ஏவப்பட்டதாகக் கூறப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்ததாகக் கூறியுள்ளது. கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் துர்கி அல்-மாலிகி ஒக்டோபர்-08அன்று வெளியிட்ட அறிக்கையில், ‘சவூதி தலைநகர் ரியாத்தை நோக்கிச் சென்ற இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், ஏமன் எல்லைக்கு அருகிலுள்ள கமிஸ் முஷைத் நகரை நோக்கிச் சென்ற ஒரு ஏவுகணையையும் தனது படைகள் இடைமறித்து அழித்ததாகக்’ தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்பு முகமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‘இடைமறிக்கப்பட்ட ஏவுகணையிலிருந்து சிதறிய பாகங்களால் ரியாத்தில் உள்ள மழலையர் பள்ளி மற்றும் மருத்துவமனை வளாகம் ஒன்றுக்கு பொருள் சேதம் ஏற்பட்டதாகத்’ தெரிவித்துள்ளது. இதில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பதை அது குறிப்பிடவில்லை.
சமீப நாட்களாக, சவூதி வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு விமான நிறுவனங்களுக்கு ஹவுதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களின் வான்பகுதியைத் தவிர, சவூதியின் வான்வெளியில் இயங்கும் எந்தவொரு விமானமும் ஹவுதிகளின் இலக்காகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்தப்பின்னணியிலேயே சவூதி அரேபியாவைத் தனது வான்வெளியை மூட நிர்ப்பந்திக்கும் முயற்சியில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளனர். இந்தத் தாக்குதல், ஹவுதிக் குழுவானது விமான நிலையம் மீது நடத்திய தொடர்ச்சியான இரண்டாவது நாள் தாக்குதலாகும். இதற்கு முந்தைய நாள் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். சவூதி அரேபியாவின் அப்ஹா சர்வதேச விமான நிலையம்; ஹவுதிகளால் உரிமை கோரப்பட்ட தனித் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. லுஃப்தான்சா மற்றும் ஏர் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் சவூதி தலைநகருக்கான விமான சேவைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்தன. மேலும், ஜெர்மனியைச் சேர்ந்த லுப்தான்சா குழும விமான நிறுவனம், ஒக்டோபர்-16 வரை ரியாத்துக்கான விமான சேவைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹவுதி கிளர்ச்சி படையின் சவுதி தலைமையிலான ஏமன் கூட்டணி மீதான தாக்குதலின் விளைவுகளை நுணுக்கமாக புரிந்து கொள்வதனூடாகவே அது ஏற்படுத்தக்கூடிய மேற்காசிய போரின் தொடர்ச்சியை இனங்காண முடியும்.
முதலாவது, ஏமனில் நிலையான போருக்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. சவூதி அரேபியா மீதான ஹவுதி தாக்குதல்கள் ஜூலை மாத இறுதியில் தொடங்கின. அண்மைய வாரங்களில், இந்தக் கிளர்ச்சிக் குழு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் முஸ்லிம்களின் புனிதத் தலங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வாரம், தெற்கு சவூதி அரேபியாவின் பல நகரங்களில் ஏற்பட்ட வெடிவிபத்துகளில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதோடு, டஜன் கணக்கானோர் காயமடைந்தனர். சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட, சவூதி தலைமையிலான ஏமன் கூட்டணி ஒரு எதிர்த்தாக்குதலைத் தொடுத்துள்ளது. ‘ஏமனின் விடியல்’ என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கையின் நோக்கம், செங்கடல் கடற்கரையோரம் கிளர்ச்சிக் குழு கைப்பற்றியுள்ள முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல்-மண்டேப் நீரிணை உள்ளிட்ட பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதாகும். கூட்டணியின் கூற்றுப்படி, எதிர்த்தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து ஏமன் படைகள் 1,860 ஹவுதிப் போராளிகளை செயலிழக்கச் செய்துள்ளன.
இரண்டாவது, மேற்காசியாவில் அதிகரிக்கப்பட்டுள்ள அணிகள் சேர்க்கையினால் ஏமன் போர் பிராந்திய போராக நீடிக்கும் அபாயத்தை எடுத்துக் கொள்கின்றது. ஒரு காலத்தில் ஹவுதி படைகளுக்கும் சவுதி தலைமையிலான ஏமன் துருப்புகளுக்கும் இடையே நடந்த தொடர் மோதல்கள், தற்போது ஒரு பிராந்தியப் போராக உருவெடுத்து வருகின்றன. இந்த வாரம், சவூதி அரேபியாவுக்கு உதவுவதற்காக, பாகிஸ்தானும் துருக்கியும் சமீபத்தில் கையெழுத்திட்ட பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செயல்படுத்தின. மேலும், மூன்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஆக்சியோஸ் செய்தி நிறுவனத்திடம், சாத்தியமான தாக்குதல் படையணியை நிலைநிறுத்துவது உட்பட, ரியாத்துக்கு இராணுவ ஆதரவை வழங்குவது குறித்து சிரியா பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தனர்.
மூன்றாவது, ஏமன் கூட்டணி எதிர் ஹவுதி போரின் அணி சேர்க்கை மத மோதல் இயல்புகளுடன் ஒருங்கிணைகின்றது. சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகள் அனைத்தும் பெரும்பாலும் சுன்னி முஸ்லிம்களால் வழிநடத்தப்படுகின்றன. இதற்கிடையில், ஏமனின் ஹவுதிகள் ஸைதி ஷியா பிரிவைப் பின்பற்றுகிறார்கள் மற்றும் ஷியா ஈரானால் ஆதரிக்கப்படுகிறார்கள். இத்தகைய ஈடுபாடு மோதலின் மதக் கூறினை மேலும் தீவிரப்படுத்துகிறது என்று நிபுணர்கள் வாதிடுகின்றனர்.
நான்காவது, சவூதி அரேபியாவின் பொருளாதார நலன் மீது ஹவுதி கடுமையான தாக்குதலை ஏற்படுத்தியுள்ளார்கள். சவூதி தலைநகர் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களால், சவூதி அரேபியாவை ஒரு வணிக மற்றும் சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் முயற்சிகள் சீர்குலைந்துள்ள நிலையில், இது அவர் மீது புதிய அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது . பட்டத்து இளவரசர் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதற்கான ஒரு முக்கிய வழியாக மாறியுள்ள வருடாந்திர எதிர்கால முதலீட்டு முயற்சி உட்பட, பல சர்வதேச உச்சிமாநாடுகளை ரியாத் விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளது.
ஐந்தாவது, ஏமன் போர் பிராந்தியத்தில் அகதிகள் பிரச்சினையை அதிகரித்துள்ளது. ஹவுதிகளுக்கு எதிராக 2,000க்கும் மேற்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அரசாங்க ஆதரவுப் படைகள் தெரிவித்துள்ளதாகவும், மேலும் ஒரு ‘ஆபத்தான பதற்ற அதிகரிப்பிற்கு’ தயாராகி வருவதாகவும் யேமனின் தைஸ் நகரிலிருந்து செய்தி வழங்கும் அல் ஜசீராவின் ஹதீல் அல்-யமானி தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் இப்போர் பதட்டத்தால், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர் என்று சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (ஐழுஆ) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் மாத நடுப்பகுதியில் 76,000 ஆகப் பதிவு செய்யப்பட்டிருந்த இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதால், இந்த நெருக்கடி கவலைக்குரியது என ஒக்டோபர்-07அன்று வெளியிட்ட அறிக்கையில் விவரித்துள்ளது.
எனவே, 2023ஆம் ஆண்டு காசா போராக பெரியளவில் ஆரம்பிக்கப்பட்ட மேற்காசிய கொதிநிலை இரண்டாம் ஆண்டில் ஈரான் போர் என்ற வடிவத்தை பெற்றது போன்று, மூன்றாம் ஆண்டில் ஏமன் போராக வடிவம் பெறும் அபாயத்தையே நிகழ்வுகள் உறுதி செய்கின்றது. பொது அரங்கில் மைய சக்திகளின் பெயர்கள் வேறுபடுகின்ற போதிலும் அணிகளும் நிழல் சக்திகளும் தொடர்ச்சி தன்மையையே கொண்டுள்ளது.
(நன்றி : தினக்குரல் – 11.10.2026)
