ஐரோப்பாவுக்கான ஜென்-சி போராட்டத்தை பிரான்ஸ் ஆரம்பித்து வைத்துள்ளதா?
கடந்த ஐந்து வருடங்களாக ஆசிய பிராந்தியத்தில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி வந்துள்ள புதிய தலைமுறையினரின் (Gen-Z/ ஜென்-சி) போராட்டங்கள் தற்போது ஐரோப்பாவையும் நெருங்க ஆரம்பித்துள்ளது. செப்டெம்பர் மாதங்களில் பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஒக்டோபர் நடுப்பகுதியில் பிரான்ஸில் பெரிய வன்முறையை உருவாக்கியிருந்தது. தெருக்களில் இறங்கியுள்ள இளைஞர்கள் சிறந்த கல்வி, மலிவு விலை வீடுகள், செலவினக் குறைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கோருகின்றனர். மேலும் அவர்கள் அரசியல் தலைவர்களுக்கு ஒரு சவாலாகவும் திகழ்கின்றனர். இந்நிலையில் ஒக்டோபர் இறுதியில் ஜேர்மனியில் புதிய தலைமுறையினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். பிரான்ஸ் நீண்ட மக்கள் போராட்ட வரலாற்றையும் புரட்சிகரமான மாற்றங்களையும் பகிரும் நாடாக காணப்படுகின்றது. எனினும் தற்போதைய போராட்டத்தின் வன்முறை வடிவம் சாதாரண மக்களையும் பெரிதும் பாதித்துள்ளது. இக்கட்டுரை பிரான்ஸின் அரசியல் போராட்ட வரலாற்று தொடர்ச்சியை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் போராட்டம், உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் போராட்டமாகத் தொடங்கியது. அதன் வளர்ச்சி, நாடு தழுவிய விரக்திக் குரலாக மாற்றியுள்ளது. கொள்ளைச் சம்பவங்கள், பொதுக் கட்டிடங்களைச் சடங்கு ரீதியாக எரித்தல் மற்றும் புகைக் குண்டுகள், கண்ணீர்ப் புகைக் குண்டுகளுடன் ஆயுதம் ஏந்திய கலவரத் தடுப்புக் காவல்துறையினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட தொடர் வன்முறைகள் ஆகியவற்றால் இது இடையிடையே நிகழ்ந்து வருகிறது. பிரெஞ்சுக்காரர்கள் போராட்டங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்பது பிரசித்தி பெற்றது. ஆனாலும், இது வித்தியாசமாகத் தெரிகிறது. பாரிஸில் வன்முறை, சேதம் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன. பொது கட்டிடங்களை தாண்டி தனியார் சொத்துக்கள் மீதும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் அரசியல் வன்முறை மற்றும் போராட்டங்களைக் கண்காணிக்கும் ஆயுத மோதல் இருப்பிடம் மற்றும் நிகழ்வுத் தரவு (Armed Conflict Location & Event Data) அமைப்பின்படி, சமீபத்திய ஆண்டுகளில் பிரான்சில் ஒரு நாளைக்கு சுமார் 20 போராட்டங்கள் நடந்துள்ளன. இவை பெரும்பாலும் சிறியதாகவும், குறிப்பிட்ட சில பகுதிகளுக்குள் நடப்பதாகவும் உள்ளன. ஆனால் சில சமயங்களில் நாடு தழுவிய அளவில், லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் நடைபெறுகின்றன.
பிரான்சில் போராட்டம் என்பது அனைவருக்குமான ஒரு செயல்பாடாக அமைந்துள்ளது. வலதுசாரி அல்லது இடதுசாரி என்ற வேறுபாடின்றி போராட்டங்கள் நிலையானதாக அமைந்துள்ளது. சமகாலத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வலதுசாரி அல்லது வணிக ஆதரவு மையவாதப் பாணியை (மாக்ரோனிசம் – ‘Macronism’) பின்பற்றுவதாகப் பெரும்பாலும் விவரிக்கப்படுகிறார். இந்தப் பின்னணியிலேயே. ‘தற்போதைய போராட்டங்களின் போது வன்முறையைத் தூண்டியதாகத் தீவிர இடதுசாரிக் குழுக்களே காரணம்’ என மக்ரோன் குற்றம் சாட்டியுள்ளார். அதேவேளை பொதுவில், போராட்டங்களை இடதுசாரிகள் மாத்திரமே செய்வதாக விம்பப்படுத்தப்படுகின்றது. இளம் இடதுசாரி ஆர்வலர்கள் மட்டுமே தெருக்களில் பேரணி நடத்துகிறார்கள் என்ற கருத்து முற்றிலும் தவறானது. கடந்த 50 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய போராட்ட இயக்கங்களில் சில வலதுசாரிகளால் வழிநடத்தப்பட்டுள்ளன. அவற்றுள் மிகவும் பிரபலமானவை 1984இல் தனியார் பள்ளிக் கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிராகவும், 2013-ல் ஓரினச்சேர்க்கைத் திருமணத்திற்கு எதிராகவும் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் ஆகும்.
அரசியல் களம் முழுவதும் ஒரு எதிர்ப்புக் கலாச்சாரம் வளர்வதற்கு இரண்டு அடிப்படைக் கூறுகள் தேவைப்படுகின்றன. ஒன்று, அநீதிக்கு எதிரான போராட்டத்தை அரசியல்மயமாக்குவது. இரண்டு, தெருக்களின் அதிகாரத்தின் மீதான நம்பிக்கை. இவை இரண்டுமே பிரான்சில் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. உணரப்படும் எந்தவொரு அநீதிக்குமான எதிர்ப்பு அரசியல்மயமாக்கப்பட வேண்டும் என்றும், அத்தகைய அரசியல்மயமாக்கல் கிளர்ச்சி வன்முறையின் வடிவத்தை எடுக்கலாம் என்றும் கூறும் கருத்து, பிரான்சில் ஒரு நீண்ட மற்றும் புகழ்பெற்ற பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, சித்தாந்தத்தால் உந்தப்பட்ட புரட்சிகரக் கிளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை முதன்முதலில் உலகிற்குக் காட்டியவர்களும் பிரெஞ்சுக்காரர்கள்தான் என்ற பெருமை உள்ளது. ‘சுதந்திரம்’, ‘சமத்துவம்’, ‘சகோதரத்துவம்’ ஆகிய சித்தாந்தங்களின் அடிப்படையை 1798ஆம் ஆண்டு பிரான்சியப் புரட்சியே உலகிற்கு வழங்கியுள்ளது. மேலும், ‘வலது’ மற்றும் ‘இடது’ ஆகியவற்றுக்கு இடையேயான நிலையான வேறுபாட்டையும் பிரான்ஸ் உலகிற்கு வழங்கியது. இந்தப் பிளவுதான் உலகெங்கிலும் உள்ள நாடாளுமன்ற மற்றும் நாடாளுமன்றம் சாராத அரசியலின் அடிப்படைக் கூறுகளாக மாறியது. 1789ஆம் ஆண்டு முதல், பிரெஞ்சுக்காரர்கள் மீண்டும் மீண்டும் போராட்டத்தை அதன் தனித்தனிப் பகுதிகளின் கூட்டுத்தொகையை விட மேலானதாக மாற்றியுள்ளனர்.
பிரான்ஸில் ஆட்சிகள் மீதான அதிருப்தியை அரசியல்மயமாக்குவதற்கான நிலையான நிறுவனங்கள் உருவெடுக்கவில்லை. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு பிரான்சில் பல குடியரசுகளும் சர்வாதிகாரங்களும் இருந்துள்ளன. மற்ற மேற்கத்தேய நாடுகளுடன் ஒப்பிடுகையில், அங்கு ஒப்பீட்டளவில் பலவீனமான இடைநிலை அமைப்புகளே இருந்துள்ளன. அது வலுவான அரசியல் கட்சிகளையோ அல்லது சக்திவாய்ந்த தொழிற்சங்கங்களையோ கொண்ட நாடு அல்ல. உண்மையில், பிரான்சில் தொழிற்சங்க உறுப்பினர்களின் விகிதம், ஐரோப்பாவின் மற்ற பகுதிகளை விட நீண்ட காலமாகவே மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது . பிரெஞ்சு மக்கள் ‘தொழிற்சங்க வேலைநிறுத்தத்தில்’ இருப்பதாகப் பரவலாக நிலவும் கருத்துக்கு மாறாக, மக்கள் போராட்டங்கள் உருவாகும் வேகம் உயர்வாக காணப்படுகின்றது. இது மக்களின் அதிருப்தியை நெறிப்படுத்தக்கூடிய நிறுவனங்களின் பலவீனத்தையே காட்டுகிறது.
பிரெஞ்சு மக்கள் தங்கள் குரலை ஒலிக்கச் செய்வதற்கான மிகச் சில வழிகளில் போராட்டமும் ஒன்றாக தேர்வு செய்கின்றார்கள். மூத்த ஆர்வலர்கள் தங்கள் இளம் ஆர்வலர்களிடம் தங்களின் முதல் போராட்டக் கதைகளைச் சொல்வதாலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதாலும், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுடன் ஒற்றுமையாக நிற்பதாலும், முந்தைய போராட்டங்களின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகின்றன. எந்தவொரு சிறந்த பிரெஞ்சுப் போராட்டக்காரருக்கும் தெரிந்தபடி, போராட்டத்தின் சின்னங்கள், மொழி மற்றும் சக்தி ஆகியவை பல தசாப்தங்கள் மற்றும் நூற்றாண்டுகள் கடந்தும் எதிரொலிக்கின்றன. சில சமயங்களில் இது பலனளிக்கிறது. போராட்டக்காரர்கள் தாங்கள் விரும்பியதை அடைகிறார்கள். சீர்திருத்தங்களும் பின்வாங்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரெஞ்சு அரசாங்கமும், கடுமையாகவும் சமரசமற்றதாகவும் இருக்கக்கூடிய தெருவோர மக்களின் தீர்ப்பை அறிந்திருக்கிறது. அதற்கு அஞ்சவும் செய்கிறது.
இவ்முன்னனுபவங்களின் பின்னனியே இன்றைய போராட்டத்துக்கும் காரணமாகின்றது. பாரிஸின் தென்கிழக்கில் உள்ள கிரெட்டெய்ல் நகரில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக செப்டெம்பர் மாதம் கல்வி தொடர்பான போராட்டங்கள் முதன்முதலில் வெடித்தன. அங்கிருந்து, வகுப்பு வேலைநிறுத்தங்கள், சாலை மறியல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் பாரிஸின் மற்ற புறநகர்ப் பகுதிகளுக்கும், பின்னர் சிறிய நகரங்கள் உட்பட நாடு தழுவிய அளவிலும் பரவின. குறிப்பாக குறைந்த வருமானம் உள்ள பகுதிகளில், நிதிப் பற்றாக்குறையுள்ள பள்ளிகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் பணியாளர் பற்றாக்குறை குறித்து உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கவலைகளை எழுப்பியுள்ளனர். பள்ளி ஆர்ப்பாட்டங்களும் சாலை மறியல்களும் பொதுமக்களின் கவனத்தை உள்வாங்கியது. ரஷ்சிய-உக்ரைன் மற்றும் மேற்காசிய போரால் ஐரோப்பாவில் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு எதிரான குரல்கள் தொடர்ச்சியாக பிரான்சிலும் எதிரொலித்து வருகின்றது. மாணவர் போராட்டத்தின் ஊக்கம் தொடர்ச்சியான குறைகளுக்கு எதிரான பெரிய போராட்டங்களாக உருமாறியுள்ளன. நூற்றுக்கணக்கான பள்ளிகள் மற்றும் பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் இந்தப் போராட்டங்களில் இணைந்தனர். பிரான்ஸ் முழுவதும் 1,60,000-க்கும் மேற்பட்ட மாணவர்களும் தொழிற்சங்கவாதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை ஒடுக்குவதற்கு அரசாங்கம், காவல்துறையின் ஈடுபாட்டை உயர்த்தியமை வன்முறை அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் நடந்த மோதல்களில் 200இற்கும் மேற்பட்ட மாணவர்கள், 85 பள்ளி ஊழியர்கள் மற்றும் 700 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் பள்ளிகளுக்குள் புகுந்துள்ளனர். மேலும் சில சமயங்களில், ஆக்கிரமிக்கப்பட்ட அல்லது முற்றுகையிடப்பட்ட கட்டிடங்களுக்குத் தீ வைத்துள்ளனர். அக்டோபர்-5அன்று, வடக்கு பிரான்சின் லென்ஸ் நகரில் நடந்த ஒரு போராட்டத்தின் போது, 15 வயது சிறுவன் ஒருவனின் கை காவல்துறை வீசிய கையெறி குண்டால் சிதைக்கப்பட்டது. இந்தச் சம்பவம், போராட்டத்தின் ஆரம்ப நாட்களிலிருந்தே அதிகாரிகள் கடைப்பிடித்து வந்த கடுமையான பதிலடியை உறுதிப்படுத்தியது. 6,000இற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், அவர்களில் பெரும்பாலோர் சிறார்கள், கைது செய்யப்பட்டு பின்னர் எந்தக் குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்திற்கு எதிரான அரசின் எதிர்வினைகளும் வரலாற்றின் முன்அனுபவங்களின் பிரதிபலிப்பாகவே அமைகின்றது. பிரெஞ்சு அரசாங்கங்கள் கொலைவெறி அடக்குமுறை வடிவில் அடிக்கடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு கடந்த கால மக்கள் போராட்ட வெற்றிகளும் ஒரு காரணமாகும். 1871இல் பாரிஸ் கம்யூன் நசுக்கப்பட்டதிலிருந்து இன்றைய காவல்துறை வன்முறை வரை, பிரெஞ்சு அதிகாரிகள் பெரும்பாலும் முதலில் சுட்டுவிட்டுப் பின்னர் கேள்வி கேட்கின்றனர். 21ஆம் நூற்றாண்டின் பதற்றத் தணிப்பு உத்திகளை வியக்கத்தக்க வகையில் எதிர்க்கும் அவர்கள், பகுத்தறிவற்ற கும்பல் பற்றிய 19ஆம் நூற்றாண்டுக் கருத்துக்களின்படியே இன்றும் செயல்படுகின்றனர்;. மேலும், பள்ளி மாணவர்கள் முதல் கால்பந்து ரசிகர்கள் வரை அனைவரையும் ஒரு சாத்தியமான அச்சுறுத்தலாக அவர்கள் கருதுகின்றனர். இது போராட்டக்காரர்களின் உறுதியை மேலும் வலுப்படுத்துகிறது. சிலர் வெளிப்படையான வன்முறையில் இறங்கி, சிறு குற்றவாளிகளுடன் சேர்ந்து தனியார் மற்றும் பொதுச் சொத்துக்களை அழிக்கின்றனர். மற்றவர்களோ, கலவரத் தடுப்புக் காவல்துறையினரின் முன்னால் டிக்டாக் காணொளிகளைப் பதிவுசெய்து, தன் குடிமக்களை ஒரு நிரந்தரத் தொந்தரவாகக் கருதும் அரசைக் கேலி செய்கின்றனர். இது நவீன ஜென்-சி போராட்டங்களின் பிரதிபலிப்பாகும்.
பிரான்ஸ், தனித்து ஒரு நாட்டிற்கான அரசியல் வடிவத்தை மாத்திரமின்றி முழு ஐரோப்பாவிற்கும் போராட்டம் சார்ந்து வழங்கி வந்துள்ளது. இந்த வரலாற்று தொடர்ச்சி சமகால போராட்டத்திலும் பிரதிபலிப்பை கொண்டுள்ளது. பிரான்சின் அண்டை நாடுகளில் புதிய போராட்டத்துக்கான அழைப்பு வருவதுடன், ஏற்கனவே போராடிவரும் நாடுகள் கவனத்தை பெறத் தொடங்கியுள்ளது. ஜேர்மனியில் ‘Gen Z regelt’ அல்லது ‘Gen Z’s Got It’ அல்லது ‘ஜென்சி இதை பெற்றுவிட்டது’ என்ற தலைப்பில், ஒக்டோபர்-31, சனிக்கிழமை அன்று ஜெர்மனி முழுவதும் பெர்லின், கொலோன், ஹாம்பர்க் மற்றும் முனிச் உள்ளிட்ட 21 நகரங்களில் மாபெரும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் வீட்டுவசதி நெருக்கடியால் போராட்டங்கள் வெடித்துள்ளன. இத்தாலியில், வாழ்க்கைச் செலவை மையமாகக் கொண்டு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு பதிலளிக்கும் விதமாக மிலனுக்கு 500 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கிடையில், அல்பேனியாவில் பல மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டங்கள், சமீப நாட்களில் வன்முறையாக மாறியுள்ளன. இங்கிலாந்தைச் சேர்ந்த சமூக வலைத்தள ஆர்வளர் மற்றும் ‘Mads Talks Politics‘ சமூகவலைத்தள கணக்கு நடத்துபவருமான மேடி லில்லி, ‘இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு வெளிப்படையாகவே போராட்டக் கலாச்சாரம்தான் என்று நான் நினைக்கிறேன். பிரான்சில் இருப்பது போன்ற ஒரு பெரிய போராட்டக் கலாச்சாரம் நம்மிடம் இல்லை. ஆனால், குறைகளைப் பொறுத்தவரை, அவை ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. வீட்டு வசதி, பாதுகாப்பற்ற வேலை, வாழ்க்கைச் செலவு, நெருக்கடியில் உள்ள பொதுச் சேவைகள்’ எனக்குறிப்பிட்டுள்ளார். எனவே இங்கிலாந்துக்கும் போராட்டத்தின் தேவையை மேடி லில்லி வெளிப்படுத்துகின்றார்.
எனவே பிரான்ஸின் இயல்புகளில் ஆழமாக பொருந்தியுள்ள போராட்டம், அதிகரித்த அதிருப்தியின் உச்சத்தில் மேல் கிளம்பியுள்ளது. அதேவேளை இன்றைய சமூக வலைத்தள யுகத்தின் ஜென்-சி போராட்ட இயல்புகளின் சேர்க்கையும் அதிகரித்த வன்முறைக்கு காரணமாகின்றது. போராட்டங்கள் மீதான ஏகபோகம் பிரெஞ்சுக்காரர்களுக்கு இல்லை என்றாலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட அவர்கள் அதை பொதுமக்களின் பார்வைக்காக வடிவமைப்பதில் அதிக நேரத்தைச் செலவிட்டுள்ளனர். இந்தப்பின்னணியிலேயே ஆசியாவின் போராட்டங்கள் ‘ஜென்-சி’ தலைப்பை பெற்ற போதிலும் பிரான்ஸ் போராட்டம் அதற்குரிய தனித்துவமான வரலாற்றோடு நோக்கப்படுகின்றது. எனினும் பிரான்ஸ் போராட்டத்தின் பின்னணியும், பிரான்ஸை தொடர்ந்து ஐரோப்பா இளையோர்களிடையே வரவேற்பு பெறும் போராட்டமும், முன்னைய ஆசிய போராட்டங்களின் காரணங்களையும் இயல்புகளையுமே கொண்டுள்ளது. ஆசியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஜென்-சி தலைமுறையின் அரசியல் போராட்டம், ஐரோப்பாவில் பிரான்ஸில் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது என்பதே அரசியல் அவதானமாகின்றது.
