அமெரிக்கா-சீனா தலைவர்கள் சந்திப்பு; மூலோபாய இணக்க தேவைக்கான புரிதலும் உடன்பாடின்மையும்!
சர்வதேச அரசியல் இயக்கமானது நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏதோவொரு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இருமைக் காரணிகளின் போட்டியிலேயே இயங்கி வருகின்றது.சமகாலத்தில் அமெரிக்கா எதிர் சீனா என்பது பிரதானமான போட்டிக் களத்தை கொண்டுள்ளது. அணிகள் சேர்க்கை, பொருளாதார வரி விதிப்புகள் என பல நாடுகள் இணைந்து சுழலுகின்ற போதிலும் யாவற்றிற்குமான மைய சூழலாக அமெரிக்கா எதிர் சீனா போட்டியே காணப்படுகின்றது. செப்டெம்பர் நடுப்பகுதியில் இந்தியாவில் பிரிக்ஸ் (BRICS) மாநாடு இடம்பெற்றது. பிரிக்ஸ் கூட்டணியின் உருவாக்கம், அமெரிக்காவின் ஒற்றை மைய அரசியலையும் அமெரிக்காவின் டொலரை மையப்படுத்திய சர்வதேச வர்த்தகத்தினையும் சவால் செய்யும் நோக்கிலேயே ஸ்தாபிக்கப்பட்டது எனும் பொதுப் பார்வை சர்வதேச அரசியல் அவதானிகள் மத்தியில் காணப்படுகின்றது. 2026ஆம் ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டில், ‘அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல் உலகளாவிய வர்த்தகப் போர் விமர்சிக்கப்பட்டது’. இவ்வாறான கள நிலைமைகளின் பின்னணியிலேயே செப்டெம்பர்-24அன்று சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்கா பயணத்தை செய்துள்ளார்.
உயர் மட்டப் பயணங்களின் போது வழக்கமாகக் காணப்படும் மிகவும் சம்பிரதாயமான நெறிமுறைகளிலிருந்து மாறுபட்டு, ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் விமானத்திலிருந்து இறங்கிய ஷி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவானை அமெரிக்கா ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் நேரில் வரவேற்றார். இந்த வரவேற்பில் 100 அடி நீள சிவப்பு கம்பளம், 21 பேர் கொண்ட மரியாதை அணிவகுப்பு, இராணுவப் பிரிவுகள், தேசிய கீதங்கள் மற்றும் இரண்டு பி-1 ரக குண்டுவீச்சு விமானங்களின் வானில் பறத்தல் ஆகியவை இடம்பெற்றன. ஜின்பிங்கை ஒரு ‘சிறந்த தலைவர்’ மற்றும் ‘நண்பர்’ என்று பலமுறை வர்ணித்த ட்ரம்ப், தனது கையுறையைக் கழற்றி கைகுலுக்கினார். இது, இரு தரப்பினருக்கும் இடையே ஆழ்ந்த கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், உறவைப் பேணுவதற்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தியது.
அமெரிக்க-சீனா வர்த்தகப் போர் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலானது. ஏற்கனவே, இரு நாடுகளும் வர்த்தகப் போர்நிறுத்தம் நிலவுகிறது. இவ்வர்த்தகப் போர்நிறுத்தத்தை ஜனவரி 10 வரை நீட்டிக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் அறிவித்தார். மறுமுனையில் அரசியல் அதிகாரத்தில் சீனாவின் ஈரான் நிலை, அமெரிக்க எதிர் கட்சிகளால் கடுமையாக சாடப்படுகிறது. அதேவேளை அமெரிக்காவின் தைவான் நிலை, சீனா அரசிடம் தொடர்ச்சியான எதிர்ப்பு போக்கு காணப்படுகிறது. இச்சூழலிலேயே அமெரிக்க மற்றும் சீனா ஜனாதிபதிகள் சந்திப்பும் கௌரவ வரவேற்புகளும் சர்வதேச அரசியல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இக்கட்டுரையும் அம்முக்கியத்துவத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 24 அன்று வெள்ளை மாளிகையில் டொனால்ட் ட்ரம்ப் – ஷி ஜின்பிங் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தை ரகசியமாக தனிப்பட்ட முறையிலேயே இடம்பெற்றது. நாடுகள் பின்னர் சாராம்சத்தை வெளிப்படுத்தியிருந்தன. சீனாவின் வெளியுறவு அமைச்சகம், “பேச்சுவார்த்தையின்போது ஷி ஜின்பிங், தைவான் சுதந்திரத்தை எதிர்க்குமாறும், தைவான் பிரச்சினையை எச்சரிக்கையுடன் கையாளுமாறும் அமெரிக்காவை வலியுறுத்தினார். செயற்கை நுண்ணறிவுத் துறையில் வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே அதிக ஒத்துழைப்புக்கு ஷி அழைப்பு விடுத்ததோடு, இரு நாடுகளும் மூலோபாய நிலைத்தன்மைக்கான ஆக்கப்பூர்வமான சீனா-அமெரிக்க உறவை நோக்கிப் பணியாற்ற வேண்டும்” என்றும் கூறியதாக தெரிவித்துள்ளது. கட்டுரை எழுதும் வரை அமெரிக்க தரப்பு சாராம்சம் வெளிவந்திருக்கவில்லை. சந்திப்புக்கு முன்னர் ட்ரம்ப், “ஷி ஜின்பிங்குடன் ஈரான் மற்றும் பல விஷயங்கள் குறித்துப் பேசுவோம்” என தெரிவித்திருந்தார்.
அமெரிக்க-சீனா தலைவர்கள் சந்திப்பினை, அதன் சாராம்சத்துடன் மாத்திரமின்றி சூழலையும் ஆழமாக நோக்குவதனுடாகவே சரியான புரிதலுக்கான வாய்ப்பை உருவாக்க முடியும்.
முதலாவது, அமெரிக்க-சீனா தலைவர்களின் சந்திப்புக்கு முன்னதாகவே வர்த்தகப் போர் நீடிப்பு தொடர்பான அறிவுப்பு கலவையான பார்வையை உருவாக்கியுள்ளது. அக்டோபர் 30(2025)அன்று தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டின் இடையே இரு தலைவர்களும் ஒரு வருடத்திற்கு தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தனர். தற்போது ஷி ஜின்பிங் வாஷிங்டனில் தரையிறங்கியபோது, கடுமையான வரிகளிலிருந்து ஓரளவு நிவாரணம் அளித்த அக்டோபர்-2025 போர் நிறுத்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாகவும், அமெரிக்காவிலிருந்து அதிக சோயாபீன்ஸ் வாங்க சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும், மேலும் சீனாவிலிருந்து அரிய வகை தாதுக்கள் ஏற்றுமதி மீதான தடையை ஜனவரி 10 வரை ஒத்திவைத்ததாகவும் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்தது. இது நீடித்த அமெரிக்க-சீனா வர்த்தக போர் நிறுத்தத்திற்கான வழியாக இருக்க கூடியதில்லை என ஆய்வாளர்கள் நிராகரித்துள்ளனர். சுங்க வரிகளைத் தாண்டி, இரு வல்லரசுகளுக்கும் இடையே புகைந்துகொண்டிருக்கும் இந்த மோதல், ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளான சீனா மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகளையும், பரந்த அளவிலான முதலீடு மற்றும் ஆராய்ச்சிக் கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளது என்றும், செயற்கை நுண்ணறிவில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போட்டி தீவிரமடைந்து வருவதை ஒருபுறம் வைத்துக்கொள்ளுங்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். “இந்த இரண்டு மாத கால நீட்டிப்பு ஒரு மாபெரும் உடன்படிக்கைக்கான பாலம் அல்ல; அது ஒரு கட்டமைப்பு ரீதியான வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தும் ஒரு தற்காலிக மணல் மூட்டை” என்று பெய்ஜிங்கைச் சேர்ந்த சர்வதேச ஆளுகை புத்தாக்க மையத்தின் மூத்த ஆய்வாளரான ஐனார் டாங்கன் அல் ஜசீராவிடம் கூறினார். ஐனார் டாங்கனின் கருத்தின் பிரகாரமே ஒரு கட்டமைப்பு ரீதியான வெள்ளத்தைத் தடுக்க இரு பெரும் அரசுகளும் விருப்பம் கொண்டுள்ளமையானது மூலோபாய ரீதியான அமைதி சூழலுக்கான வாய்ப்பையே அடையாளம் காட்டுகின்றது.
இரண்டாவது, மூலோபாய இணக்கம் இரு தலைவர்களின் உரையாடல்கள் மற்றும் வரவேற்பு நிகழ்வுகளில் நிறைந்து காணப்படுகிறது. ஷி ஜின்பிங்கை வரவேற்க ட்ரம்பின் நேரடி வருகையும் பிரம்மாண்ட வரவேற்பும் அமெரிக்க இணக்க செய்தியை வழங்கும் உத்தியாகவே அமைகிறது. அதேவேளை வெள்ளை மாளிகை இரவு விருந்து உரையாடலில் இரு நாட்டு தலைவர்களிடையே அதிக இணக்கமான விடயங்கள் பரிமாறப்பட்டுள்ளது. டிரம்ப், ஷி ஜின்பிங்குடன் தனக்குள்ள உறவை “உண்மையிலேயே ஒரு சிறந்த நட்பு” என்று குறிப்பிட்டதோடு, இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா-சீனா ஒத்துழைப்பையும் நினைவு கூர்ந்தார். இரு நாடுகளும் “அமைதியாக இணைந்து வாழ வேண்டும்” என்று கூறிய ஷி ஜின்பிங், “ஒத்துழைப்பால் இரு தரப்பினரும் பயனடைவார்கள் என்றும், மோதலால் இழப்பார்கள்” என்றும் வலியுறுத்தினார். ‘துசிடிஸ் பொறி குறித்து எச்சரித்த ஷி ஜின்பிங், “அமெரிக்க-சீனப் போட்டியானது ஒரு தரப்பு தோற்க வேண்டிய போராட்டமாக இல்லாமல், ஒரு ஆரோக்கியமான பந்தயமாகவே நீடிக்க வேண்டும்” என்று கூறினார். “இரு வல்லரசுகளுக்கும் இடையே மறைமுக மோதலும் இல்லை, நேரடி மோதலும் இல்லை என்ற நிலையைத் தக்கவைக்க, வழக்கமான இராணுவப் பேச்சுவார்த்தை மற்றும் வலுவான நெருக்கடி காலத் தகவல் தொடர்புக்கு” அவர் அழைப்பு விடுத்தார். செயற்கை நுண்ணறிவு குறித்துப் பேசிய ஷி ஜின்பிங், “அதன் வளர்ச்சி மனிதக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதையும், அது பொது நலனுக்குப் பயன்படுவதையும் இரு நாடுகளும் உறுதி செய்ய வேண்டும்” என்றார். முக்கிய நாடுகள் ஒன்றோடொன்று இணக்கமாகப் பழகுவதற்கு, சீனாவும் அமெரிக்காவும் ஒரு புதிய அணுகுமுறையை ஆராய வேண்டும் என ஷி ஜின்பிங் தெரிவித்தார். ட்ரம்பின் ‘மகா’ (MAGA – Make America Great Again) கொள்கையும், சீனாவின் புத்துயிரூட்டும் இலக்குகளும் ஒன்றையொன்று ஆதரிக்க முடியும் எனவும் ஷி குறிப்புட்டுள்ளார். இரு நாட்டு தலைவர்களின் கருத்துக்களும் நட்பு பாராட்டலும் மூலோபாய ரீதியாக இரு வல்லரசுகளையும் இணக்கத்துடன் இழுத்து செல்லக் கூடியதாகவே அமைகின்றது. எனினும் இது வெறுமனவே முக ஸ்துதிக்கும் ராஜதந்திரத்துக்குமான உரையாடலாக மாத்திரம் அமையின் இரு தரப்பு உறவும் உலக அமைதியும் சவாலுக்குரியதாகவே காணப்படும்.
மூன்றாவது, பொது உடன்பாடுகள் இரு தலைவர்களிடையே பற்றாக்குறையாகவே காணப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு, முக்கிய கனிமங்கள், மனித உரிமைகள், வர்த்தக வரி விதிப்புகள் மற்றும் தைவான் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் இரு தரப்பு பேச்சுவார்த்தை உள்ளடக்கமாக அமைந்துள்ளது. ஆனால், மிகுந்த ஆடம்பரத்துடனும் கோலாகலத்துடனும் தொடங்கிய அந்த நாள், பெரிய அளவில் சாராம்சம் ஏதுமின்றி, சில முக்கிய முன்னேற்றங்கள் இன்றியே நிறைவடைந்தது. எட்டப்பட்ட உடன்பாடு என்ற அடிப்படையில் இரண்டு ராட்சத பாண்டாக்கள் அட்லாண்டா மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பப்படும் என்று ஷி ஜின்பிங் அறிவித்துள்ளார். சுங்கவரிக் கவலைகள், அரிய கனிமங்களுக்கான போட்டி அல்லது சோயாபீன்ஸ் கொள்முதல் தொடர்பான எந்தவொரு விரிவான ஒப்பந்தங்களையும் ட்ரம்ப்பும் ஷியும் அறிவிக்கவில்லை. தைவான் விவகாரத்திலும் சீனா விருப்பு வெளிப்பட்டுள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் இது குறித்து இதுவரை பகிரங்கமாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை. ‘இந்த உயர்மட்ட உச்சிமாநாடு பல மாதங்களாகத் திட்டமிடப்பட்டு வந்தது. ஆனாலும் வெள்ளை மாளிகையின் தயாரிப்புகள் எதிர்பார்த்தபடியே குழப்பமாகவும் திறமையற்றதாகவும் இருந்தன’ பொரின் பொலிசி (Foreign Policy) தளத்தில் ஜேம்ஸ் பால்மர் இந்த எழுதியுள்ளார். உயர்ந்தபட்சமாக, நல்லெண்ணத்தின் அடையாளமாக, இரு தலைவர்களும் நெருங்கிய ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தி அறிக்கைகளை வெளியிட்டனர். இது மூலோபாய இணக்கத்தை இழுத்து செல்லக் கூடிய எதிர்பார்க்கைகள் காணப்படுகிறது.
எனவே, அமெரிக்க-சீனா தலைவர்களின் சந்திப்பு ஓர் மூலோபாய இணக்க தேவையை இரு தலைவர்களும் உள்வாங்குவதை வெளிப்படுத்தியுள்ளது. மாறாக நிலையான உடன்பாடுகளுக்கு செல்வதற்கான உறுதிப்பாடு இன்மையையும் இனங்காட்டி உள்ளது. வளர்ந்து வரும் ஒரு சக்தியும், நிலைபெற்ற ஒரு சக்தியும் போருக்குச் செல்லும் போது ஏற்படும் ‘துசிடைட்ஸ் பொறி’ குறித்த ஷி ஜின்பிங்கின் எச்சரிக்கை மூலோபாய இணக்க தேவை உணர்தலுக்கான சான்றாக அமைகிறது. அதேவேளை சமகால உலகின் அச்சுறுத்தலாக வளரும் செயற்கை நுண்ணறிவுத் துறையை பாதுகாப்பு நடவடிக்கைகளில் இரு தரப்பும் ஆர்வம் காட்ட மறுப்பது உடன்பாடுகளுக்கு செல்வதற்கான உறுதிப்பாடு இன்மைக்கான சான்றாக அமைகிறது. “சூப்பர் இன்டெலிஜென்ஸ் (SI) என்பது ஒரு முக்கிய விவாதப் பொருளாக இருக்கும்; ஆனால், அதை அப்படியே விட்டுவிடவே நான் விரும்புகிறேன்” என்று ட்ரம்ப் வியாழக்கிழமையன்று ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டார். அமெரிக்காவைப் பொறுத்தவரை நீதித்துறையே அதற்கான பாதுகாப்புக் கட்டமைப்பாக (guardrail) உள்ளது என்று அவர் வாதிட்டார். சீனாவின் நிலைப்பாடும் அதுவாகவே காணப்படுகின்றது. இரு வல்லரசு நாட்டு தலைவர்களின் சந்திப்பு நடப்பு நட்பு பாராட்டும் சங்கதி என்பதை தாண்டி, நிலையான மாற்றத்தையோ வடிவத்தையோ உருவாக்கவில்லை என்பதே சர்வதேச அரசியல் அவதானிகளின் பொது வெளிப்பாடாக உள்ளது.
(நன்றி : தினக்குரல் – 27.09.2026)
