துருக்கி-பி.கே.கே சமாதான முயற்சி; குர்துகளை சரணாகதியாக்குகிறது!
ஒரு தேசிய இனத்தின் விடுதலை போராட்டமானது வெறுமனே உள்ளூர் அரசியலுடன் சுருங்குவதில்லை. மாறாக பிராந்திய, சர்வதேச அரசுகளின் நலன்களுடன் தொடர்புபடுகின்றது. மோதுகையில் பெரும்பாலும் அழிகின்றது. ஒருங்கிணைகையில் பெரும்பாலும் இலக்கினை அடைவதற்கான பாதையை இனங்காண்கின்றது. சில சந்தர்ப்பங்களில் ஒருங்கிணைவு சரணாகதி நிலையை பெறுகையில் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம், பிராந்திய அல்லது சர்வதேச அரசுகளின் நன்களுக்குள் நசுக்கப்படும் நிலைமைகளும் அவதானிக்கப்படுகின்றது. மேற்காசியாவில் நீண்ட வரலாற்றை பகிரும் குர்துக்களின் விடுதலைப் போராட்டம் துருக்கியின் பிராந்திய சமநிலைக்கான போட்டியிலும் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் சரணாகதி போக்கினாலும் பலவீனப்படுகின்றது என்ற பொது விமர்சனம் சர்வதேச அரசியல் அவதானிகள் மத்தியில் மேலெழுந்துள்ளது.
துருக்கி குர்திஸ்தான் பகுதியான பாகூரில், சமகால குர்துக்களின் ஆயுதப் போராட்டத்திற்கான தலைமையை வழங்கி வந்த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியினை (பி.கே.கே) அழிப்பது துருக்கியின் மிகவும் லட்சியமான அரசியலாக இருந்து வருகிறது. 2015இல் தொடங்கி, எர்டோகன் இராணுவ நடவடிக்கைகள், நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் அமைப்பின் தலைமையை பலவீனப்படுத்தி இறுதியில் செயலிழக்கச் செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட பலவிதமான வற்புறுத்தல் கொள்கைகளை இணைத்த ஒரு விரிவான உத்தியைப் பின்பற்றினார். மே 2025க்குள், பி.கே.கே தன்னிச்சையாகவும் முன்நிபந்தனைகள் இன்றியும் அமைப்பைக் கலைக்க முடிவு செய்தது. துருக்கிய அரசாங்கம் ஒரு துப்பாக்கிச் சூடு கூட நடத்தாமலேயே, பி.கே.கே உடனான பல தசாப்த கால மோதல் திறம்பட முடிவுக்கு வந்துள்ளது.
இச்சமாதான பொறிமுறைக்குள் பொதிந்துள்ள துருக்கியின் பிராந்திய அதிகார சமநிலைக்கான போட்டி கடந்த வாரம் இப்பந்தியில் ஆராயப்பட்டது. இவ்வாரம் பி.கே.கே-யின் சமாதானத்திற்கான உத்தி, சரணாகதி அரசியலாக குர்துக்களின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்துகிறது என்ற சர்வதேச அரசியல் அவதானிகளின் விமர்சனத்தை நுணுக்கமாக அவதானிப்பதாகவே கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
ஒன்று, விரிவான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னரான பி.கே.கே-யின் கலைப்பு சரணாகதி அரசியலாகவே அவதானிக்கப்படுகிறது. எர்டோகன் கூட்டணி அரசாங்கம், குறிப்பாக கடந்த காலங்களில் பி.கே.கே தலைவர் ஒகாலனுக்கு மரண தண்டனை விதிக்க தொடர்ச்சியாக அழுத்தம் பிரயோகித்து வந்த துருக்கி தேசியவாத இயக்கக் கட்சியின் தலைவரும் அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சியாளருமான டெவ்லெட் பஹ்செலி, துருக்கிய நாடாளுமன்றத்தில் பி.கேகே-ஐ நிபந்தனையின்றி கலைப்பதாக அறிவிக்குமாறு ஓகாலனுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் அவரது சிறைத் தண்டனையைத் தளர்த்துவதற்கான வாய்ப்பையும் வழங்கினார். துருக்கியின் இவ்அரசாங்க தரப்பு அறிவிப்பை குர்து ஆதரவு மக்கள் சமத்துவம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஒரு அமைதி செயல்முறைக்கான வாய்ப்பாகக் கருதுகின்றனர். இந்த பின்னணியிலேயே சிறையில் ஒகாலனுடனான சந்திப்பை தொடர்ந்து, பி.கே.கே கலைப்பும் அறிவிக்கப்பட்டது. எனினும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், அவரது முக்கிய கூட்டாளியான டெவ்லெட் பஹ்சேலி மற்றும் பிற அரசாங்கப் பிரதிநிதிகள் ‘செயல்முறை’ அல்லது ‘பேச்சுவார்த்தைகள்’ போன்ற சொற்களைப் பயன்படுத்துவதை வேண்டுமென்றே தவிர்க்கின்றனர். அதற்கு பதிலாக ‘பயங்கரவாதமற்ற துருக்கி’ பற்றிப் பேசுகிறார்கள். இது நிபந்தனையற்ற ஆயுதக் களைவு மற்றும் பி.கே.கே கலைப்பு மூலம் மட்டுமே அடையப்பட வேண்டும். இதனோடு ஒருங்கிணையும் வகையிலேயே உறுதியான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாகவே பி.கே.கே கலைப்பு மற்றும் பகுதியளவு ஆயுத களைவுகளை பி.கே.கே செய்துள்ளது. இறுதி ஆயுதக் களைதல் மற்றும் கலைப்பு ஆகியவை ஒகாலனின் தனிப்பட்ட தலைமையின் கீழ் மட்டுமே நடைபெற முடியும் என்றும், இதற்கான தேவையான அரசியல் மற்றும் சட்டக் கட்டமைப்பை துருக்கிய அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும் அது நிபந்தனை விதித்தது. எனினும் கடந்த ஒரு வருடமாய் ஒகாலன் தொடர்பில் துருக்கிய அரசாங்கம் உறுதியான முடிவை எடுக்கவில்லை. கடந்த காலங்களிலும் குர்துக்கள் நிலையான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே தங்களது ஒருங்கிணைவை வெளிப்படுத்தி, இறுதியில் ஏமாற்றப்பட்ட வரலாற்று அனுபவங்கள் காணப்படுகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகளுடனான தனது கூட்டாண்மை குறித்து குர்துகள் கையாண்ட அணுகுமுறையும் இந்தப் பிரச்சனையுடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. ஈராக் மற்றும் சிரியா ஆகிய இரண்டிலும் அந்த அமைப்பைத் தோற்கடிப்பதில் குர்துப் படைகள் முக்கியப் பங்காற்றியபோதிலும், அவர்களது முயற்சிகளுக்கு மிகக் குறைவான அரசியல் வெகுமதியே கிடைத்தது. மேலும், இறுதியில் அவர்கள் தண்டிக்கப்பட்டனர். இதற்குக் காரணம், மோதலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ குர்துத் தலைவர்கள் தெளிவான அரசியல் நிபந்தனைகளை விதிக்கத் தவறியதே ஆகும். துருக்கிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு முன்பு பி.கே.கே தன்னைத்தானே கலைத்துக்கொள்ள எடுத்த முடிவு, இதேபோன்ற ஒரு மூலோபாய தவறான கணிப்பாகும். இந்த முடிவு துருக்கியில் உள்ள குர்துகளுக்கு மட்டுமல்ல, சிரியாவில் உள்ளவர்களுக்கும் பின்னடைவேயே ஏற்படுத்தியயுள்ளது.
இரண்டு, குர்துகளின் விடுதலைப் போராட்டம் கிடைப்பதை பெற்று ஸ்திரப்படுத்தி கொண்டு, தூர இலக்கை நோக்கி செயற்படும் உத்தியை கொண்டுள்ளது. எனினும் கிடைப்பதை பெறுவதாகவும் அத்தோடு மட்டுப்படுவதாகவே வரலாறாகிறது. இது குர்து தேசிய இலக்குகள் அடிக்கடி மறுவரையறை செய்யப்படும் சூழலை உருவாக்குகின்து. இது மக்களிடையே அவநம்பிக்கையையும் சலிப்பையும் உருவாக்கி பின்னடைவுக்கு தள்ளுகிறது. உதாரணமாக, ஈராக் குர்திஸ்தான் நிலப்பரப்பில் குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சி, தனது அறிவிக்கப்பட்ட இலக்கை சுதந்திரத்திலிருந்து சுயாட்சிக்கும், இறுதியாக மீள சுதந்திரத்திற்கும் மாற்றியமைத்தது. எனினும் முன்னர் சுதந்திரத்திலிருந்த உத்வேகம், கிடைக்கப்பெற்ற பிராந்திய சுயாட்சிக்கு பின்னனரான சுதந்திர இலக்கில் காணப்படவில்லை. தற்போது பி.கே.கே சுதந்திரத்தை ஆதரிப்பதிலிருந்து ஜனநாயக சுயாட்சியை ஊக்குவிப்பதற்கும், மிக அண்மையில், கலாச்சார மற்றும் மொழி உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கும் நகர்ந்தது. ஒகாலனின் சமாதான அழைப்பு, பஹ்சேலி மற்றும் எர்டோகனின் கருத்துக்களுடன் ஒத்துப்போகும் மையக் கருத்துக்களை வலியுறுத்துகிறது. ஒரு சுதந்திரமான தேசிய அரசு, கூட்டாட்சி, தன்னாட்சி அல்லது கலாச்சாரவாத அணுகுமுறைகள் போன்ற முந்தைய மாதிரிகளை அவர் நிராகரிக்கிறார். மேலும் சமூக சவால்களுக்கு நீடித்த தீர்வுகளை உருவாக்குவதற்கு அவை பொருத்தமற்றவை என்றும் கருதுகிறார். மாறாக, பங்கேற்பு மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு ஜனநாயக சமூகத்தை உருவாக்குவதில் நீடித்த அமைதிக்கான அடிப்படையை அவர் காண்கிறார். அரசியல் நோக்கங்களில் ஏற்படும் இத்தகைய தொடர்ச்சியான மாற்றங்கள் குர்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதோடு, ஒரு சீரான தேசிய அடையாளத்தை ஒருங்கிணைப்பதையும், தேசிய உரிமைகளை அடைவதற்கான ஒரு நிலையான உத்தியை வகுப்பதையும் தடுத்துள்ளன. மேலும், இந்த உத்திசார்ந்த நிலைத்தன்மையின்மை, குர்து இயக்கத்தின் அரசியல் நிலையைப் பலவீனப்படுத்தியதோடு, மத்திய அரசாங்கங்களுடனான அதன் பேரம்பேசும் சக்தியையும் குறைத்துள்ளது.
மூன்று, அலிசா மார்கஸின் தனது ‘’மீள் எழுச்சியும் புரட்சியும்: துருக்கி மற்றும் சிரியாவில் பி.கே.கே-வும் குர்துக்களின் போராட்டமும்’ (Resurgence and Revolution: The PKK and the Kurdish Fight in Turkey and Syria) என்ற நூலில் துருக்கி-பி.கே.கே சமாதானத்தின் நம்பிக்கையீனம் பற்றிய விடயத்தில், ‘துருக்கியின் தேசியவாத கட்சிகளின் பிடியில் எர்டோகன் விலகி வருவதும்; குர்துகளின் குறைந்தபட்ச தேசிய இலக்குகளுக்கு தீர்வு கொடுப்பதும் சாத்தியமற்றதாக’ சுட்டிக்காட்டுகின்றார். துருக்கிய – குர்திஷ் ஒற்றுமைக்கு கடந்த காலங்களில் முக்கியத் தடையாக இருந்தது துருக்கிய தேசியவாத சிந்தனையின் பிடியே ஆகும். முரண்பாடாக எர்டோகனின் தீவிர தேசியவாத கூட்டாளியும், தேசியவாத இயக்கக் கட்சியின் தலைவருமான டெவ்லெட் பஹ்செலிதான் சமாதான முன்னெடுப்பை முன்னெடுத்துச் செல்ல மிகப்பெரிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். எர்டோகனோ, துருக்கிய தேசியவாத எதிர்ப்பைத் தூண்டக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதில் தொடர்ந்து அதிக அச்சம் கொண்டவராகவே இருந்து வருகிறார். இதனோர் பகுதியாகவே ஆகஸ்ட் மாதம் துருக்கி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொது மன்னிப்பு மசோதாவிலும் ‘நாடு கடத்தப்பட்ட கிளர்ச்சியாளர்கள், அவர்களின் தண்டனைக் காலத்தை பொறுத்து ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரையில் அரசியலிலிருந்து தடை செய்யப்படுர்கள்’ என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது. இது பி.கே.கே-யினை குர்துகளின் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தும் உத்தியாகவே அமைகின்றது. இது துருக்கி தேசியவாதிகளுக்கான எர்டோகன் செயலாகவே அமைகிறது. பஹ்செலியின் முயற்சிகள் இருந்தபோதிலும், பஹ்செலியும் துருக்கிய தேசியவாதிகளும் குர்திஷ் கோரிக்கைகளுக்கு விரோதமாகவே உள்ளனர். மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட விரும்பும் எர்டோகன், அவர்களின் மேலாதிக்க சிந்தனைக்கு சவால் விடும் அபாயத்தை எடுக்க மாட்டார்.
எனவே, துருக்கியுடனான பி.கே.கே-யின் சமாதான நகர்வு கடந்த வாரம் இப்பத்தியில் விபரித்ததைப் போன்று துருக்கி அரசின் பிராந்திய சமநிலையை உறுதி செய்ய தேவையான ஒருபக்க உத்தியாகவே நகர்கிறது. மாறாக பி.கே.கே-யின் நிபந்தனையற்ற முன்னகர்வுகள், பி.கே.கே-யின் பேரத்தை பலவீனப்படுத்தியுள்ளதோடு சரணாகதி விம்பத்தையே உருவாக்கியுள்ளது. பிராந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள அதிகார சமநிலைக்கான இழுபறி அரசற்ற விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் குர்திஷ் தேசிய இனக்குழுமத்தின் பேரத்தையே பலப்படுத்துகிறது. எனினும் குர்து தலைவர்கள் கடந்த காலத்திலிருந்து அனுபவத்தைப் பெறாது மீண்டும் மீண்டும் அரசுகளுடன் நிபந்தனையற்று ஒருங்கிணைவது, தலைவர்களின் இராஜதந்திரமற்ற நகர்வுகளையே இனங்காட்டுகிறது. குர்துகளின் சுதந்திரம் குறித்த நீண்டகால விருப்பத்தைப் பொறுத்தவரை, அதன் நனவாக்கம் என்பது சாதகமான பிராந்திய மற்றும் சர்வதேச சூழ்நிலைகளாலேயே சாத்தியமடையக் கூடியதாகும். அதேவேளை அந்நலன்களை அடையக்கூடிய உத்தியைக் கொண்ட தலைமையும் குர்துகளிடம் காணப்படவில்லை என்பதே குறைவாக காணப்படுகின்றது.
(நன்றி : தினக்குரல் – 20.09.2026)
