அரசுகளின் அறிவிப்பால் எல்லையில் போர்பதற்றம் அதிகரிப்பு
சிம்லா ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது போர்ப்பதட்டத்தை மேலும் ஊக்குவிப்பதாகவே அமைகிறது என்று இலங்கையின் முன்னணி பத்திரிகைகளில் இலங்கை மற்றும் சர்வதேச அரசியல் நிலவரங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதிவருபவரும், டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசறிவியலில் முதுகலைமானி பட்டப்படிப்பை மேற்கொண்டு வருபவருமான எழுத்தாளர் ஜ.வி.மகாசேனன் அவர்களிடம் மின்னஞ்சல் மூலம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவரது பதில்களை முழுமையாகத் தருகின்றோம்.
இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதே இது பற்றி ?
காஷ்மீர் பகல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள இராஜீக நெருக்கடிகளும், இரண்டு நாட்டின் எல்லையில் நடக்கும் முரண்பாட்டு சூழ்நிலைகளும் போருக்கான முன்னறிவுப்புக்களாகவே பொதுவாக உணர முடிகிறது.
குறிப்பாக காஷ்மீர் பகல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டு பயணிகள் இருவர் உட்பட 28 பேர் இறந்துள்ளமையும், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டஸ் பிரண்ட் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளமையும் இந்தியா-பாகிஸ்தான் இராஜீக உறவில் உடனடியாக நெருக்கடியை உருவாக்கியிருந்தது. இந்த பின்னணியிலேயே, தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தியா பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பாகிஸ்தான் உடனான இராஜதந்திர உறவுகள் முழுமையாக முடிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய-பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட ‘சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை’ இந்தியா இரத்து செய்துள்ளது. இதனூடாக பாகிஸ்தானின் நீர் ஆதாரமாக, பாகிஸ்தானின் 80சதவீத நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் சிந்து நதி தடைப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானின் பொருளாதாராத்தையும், மக்கள் உயிர்வாழ்வையும் முழுமையாக சீர்குலைக்கக்கூடியதாகும். இது போருக்கான எச்சரிக்கையே ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் அரச அறிவிப்பும் அதனையே உறுதி செய்கின்றது.
காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டு கோட்டை இருநாடுகளும் ஏற்றுக்கொள்வது தொடர்பில் 1971ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிம்லா ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இது மேலும் போர்ப்பதட்டத்தை ஊக்குவிப்பதாகவே அமைகிறது. பல அரசியல் நிபுணர்களும், போரியல் அவதானிகளும் மூன்றாம் உலகப்போர் என்பது ‘நீரை மையப்படுத்தியது’ என்றான கருத்துக்களை பல தளங்களில் சுட்டிக்காட்டி உள்ளார்கள். இவ்வாறான பின்னணியில் பாகிஸ்தானுக்கான சிந்து நதி நீரோட்டத்தை இந்தியா தடுத்துள்ளமையும் அதுசார்ந்த எதிர்வினைகளும் போர்ப் பதட்டத்தையே வெளிப்படுத்துகிறது. எனினும் பதட்டம் நிலையான போருக்கு நகர்த்தப்படுமா என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. சர்வதேச அனுபவங்கள் நிலையான போரின் அழிவுகரமான பின்விளைவுகளையே முன்னறிவிக்கிறது.
எனினும் இரு நாட்டு அரசியல் தலைவர்களும் தமது அறிவிப்புக்களில் போரையே முன்னிலைப்படுத்தியுள்ளார்கள். பீஹாரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். “இன்று, பீகார் மண்ணிலிருந்து நான் முழு உலகிற்கும் சொல்ல விரும்புகிறேன். இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதி, ஆதரவாளர் மற்றும் சதிகாரரையும் அடையாளம் கண்டு, கண்டுபிடித்து தண்டிக்கும். பூமியின் கடைசி வரை அவர்களைத் துரத்துவோம். அவர்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனையைப் பெறுவார்கள்” எனத் தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியில், “ஒரு முழுமையான தாக்குதல் அல்லது அதுபோன்ற ஏதாவது நடந்தால், நிச்சயமாக ஒரு முழுமையான போர் இருக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இருநாட்டு அரசியல் தலைவர்களும் போருக்கான எச்சரிக்கைகளே வலுவூட்டுகிறார்கள்.
இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவங்களின் தற்போதைய படை அமைப்பு, பலம் குறித்த ஒப்பீடுகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. அவை குறித்த தங்கள் கருத்து என்ன?
அரசறிவியல் மாணவனாகவும், அவதானிப்பாளனாகவும் இவ் ஒப்பீட்டு செய்திகள் கோபத்தையும் சிரிப்பையுமே ஏற்படுத்துகிறது. கோபம் போரை தூண்டுவதும்; சிரிப்பு மக்களின் அறியாமையை நினைந்தும் ஏற்படுகிறது. இராணுவ, ஆயுத படைபலம் பற்றிய ஒப்பீடுகளும், செய்திகளும் உணர்வுபூர்வமான தேசியவாதத்தையே ஊக்குவிக்கிறது. மாறாக ஆரோக்கியமான யோசனைகளை வழங்கக் கூடியதில்லை. ஊடகங்கள் ஆரோக்கியமான யோசனைகள் ஊடாகவே பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்க வேண்டும். மாறாக உணர்ச்சிபூர்வமான அரசியலுக்குள் பொதுசன அபிப்பிராயத்தை திரட்டுவது ஆபத்தானதாகும்.
குறிப்பாக சர்வதேச அனுபவத்தில் ரஷ்யா-உக்ரைன் போரை ஆழமாக கவனிக்க வேண்டி உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில், ரஷ்யா மற்றும் உக்ரைன் இராணுவ-ஆயுத படை பலங்கள் ஒப்பிடப்பட்டு இருப்பின் ‘மலையும்-மடுவும்’ போன்ற ஒப்புவமை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். நானும் அன்றைய அரசியல் கட்டுரையில் ரஷ்யா-ஜோர்தான் எட்டு நாள் யுத்த வரலாற்றை மீள்நினைவுபடுத்தியிருந்தேன். எனினும் உக்ரைன் ஏறத்தாழ 3 ஆண்டுகளாக போரை தக்கவைத்துள்ளதுடன், ஒரு சில சந்தர்ப்பங்களில் ரஷ்யாவிற்கு சில அழிவுகரமான தாக்குதல்களையும் ஏற்படுத்தி இருந்தது. இதன் பின்னால் பூகோள புவிசார் அரசியல் தாக்கங்கள் ஆழமான செல்வாக்கை செலுத்துகின்றது. பூகோள புவிசார் அரசியல் தாக்கம் மறைமுக நிகழ்ச்சி நிரலாகும். இப்பூகோள புவிசார் அரசியல் தாக்கத்தை இந்திய-பாகிஸ்தான் இராணுவ, ஆயுத படை பலங்களை ஒப்பிடும் செய்திகள் கவனிக்க தவறுகின்றது. இவ்வாறான பிரம்மைகளால் உருவாக்கப்படும் போர் நிலையான தீர்வை அல்லது நிலையான முடிவை வழங்கப் போவதில்லை. மாறாக ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-ஹமாஸ் போன்று இந்தியா-பாகிஸ்தான் நீளும்.
யுத்தம் ஒன்று மூழுமிடத்து பாகிஸ்தானின் சீன ஆதரவு இந்திய இராணுவத்துக்கு சவாலாக இருக்குமா?
நிச்சயமாக ஒரு பெரிய யுத்தத்தை நோக்கி இந்தியா-பாகிஸ்தான் நகரும் என்பதில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை. காரணம் இந்தியா வளர்ந்து வரும் ஓர் அரசியல் பொருளாதார சக்தியாகும். இவ்அரசு தனது எல்லைக்குள் போரை நிகழ்த்துவதனூடாக தனது அரசியல் பொருளாதார வாய்ப்புகளை இழக்கும் சூழலுக்குள் நகராது. தேர்தல் அரசியலுக்குள் இயங்கும் அரசியல் கட்சிகளின் நலன் சார்ந்த இயல்புக்குள் பாகிஸ்தான் மீதான சீண்டுதல்களை செய்ய வேண்டியது இந்திய அரசாங்கத்திற்கு தேவைப்படுகின்றது. அதனையே தற்போது செய்கின்றது. எல்லையில் இடம்பெறும் இந்தியா-பாகிஸ்தான் இராணுவ வீரர்களுக்கிடையிலான துப்பாக்கிச் சூடு என்பதும் அவ்வாறானதொன்றாகவே அமைகின்றது. மேலும் இயல்பானது. இன்றைய நெருக்கடியில் அது பூதாகாரமான விம்பத்தை குறித்து நிற்கலாம். ஆயினும் நிலையான போரினூடாக பொருளாதார வளர்ச்சியை எதிர்நிலைக்கு இந்திய இராஜதந்திரிகள் நகர்த்தப் போவதில்லை.
அதேவேளை இந்திய-பாகிஸ்தான் முரண்பாட்டில், இந்தியா-சீனாவின் போட்டி அரசியலினடிப்படையில் பாகிஸ்தானிற்கு சீன இராணுவ-ஆயுத ஆதரவுகளை வழங்கும் எனும் பார்வை பொதுப்புத்திக்குட்பட்டதாகும். இராஜதந்திர-மூலோபாய நகர்வுகளில் இத்தகைய பழைய மோதல்கள் மற்றும் அணிகளை எல்லாம் கணிக்க இயலாது. சந்தர்ப்ப சூழ்நிலைகளே அணிகளையும் ஆதரவுகளை உருவாக்குகின்றது. ஈழத்தமிழர்களுக்கு வலுவான முன்னுதாரணமும் காணப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரில் இலங்கை அரசிற்கு இந்திய-பாகிஸ்தான்-சீனா போன்ற போட்டி அரசுகள் ஒரணியாகவே ஆதரவளித்திருந்தது. இது மூலோபாய நகர்வு சார்ந்ததாகும். சமகால சர்வதேச அரசியல் பரப்பில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரிவிதிப்பு சீனாவை இந்தியா நோக்கி நகர்த்தியுள்ளது. இவ்வாறான பின்னணியில் பாகிஸ்தானுக்கான வெளிப்படையான ஆதரவை சீனா வழங்கப் போவதில்லை.
இவ்வாறான புரிதலுடனேயே பாகிஸ்தான் இணக்கமான போக்கையும் வெளிப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், “பஹல்காமில் சமீபத்தில் நடந்த சோகம் இந்த நிரந்தர பழி விளையாட்டுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு, இது ஒரு முடிவுக்கு வர வேண்டும். பொறுப்பான நாடாக தனது பங்கைத் தொடர்ந்து, பாகிஸ்தான் எந்தவொரு நடுநிலை, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணையிலும் பங்கேற்கத் திறந்திருக்கிறது,” என கைபர்-பக்துன்க்வாவின் காகுலில் உள்ள பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் நடைபெற்ற இராணுவ கேடட்களின் பயிற்சி அணிவகுப்பில் உரையாற்றியுள்ளர். இத்தகைய உரையாடல் ஒரு தளத்தில் பதட்டத்தின் நிலையான போர் அச்சத்தை குறைப்பதாகவே அமைகிறது.
நீங்கள் இலங்கையிலிருந்து சென்று டெல்லி பல்கலைக்கழகத்தில் கல்விகற்கிறீர்கள் காஸ்மீர் தீவிரவாதத் தாக்குதலின் எதிரொலியை டெல்லியில் எவ்வாறு உணர்கிறீர்கள்?
டெல்லியின் களச்சூழல் இயல்பான தன்மையே உணரக்கூடியதாக உள்ளது. பல்கலைக்கழக மட்டத்தில் ஒரு சில கவனயீர்ப்பு கண்டனங்கள் இடம்பெற்றிருந்தது. அதனை தாண்டி பாதுகாப்பு நெருக்கீடு சார்ந்து எவ்வித மாறுபட்ட சூழலையும் உணர முடியவில்லை. தாக்குதல் தொடர்பான செய்திகளை சமுக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக தேடுகையிலேயே ஒரு கொதிநிலையை உணரக்கூடியதாக இருந்தது. சமுகங்களிடையே வன்மத்தை விதைக்கும் கருத்தாடல்கள் நிறைந்திருந்தது. இது சமுக வலைத்தள காலம். சமுக வலைத்தள போராளிகள் அவ்வட்டத்தினுள்ளேயே உச்சபட்ச கருத்து மோதல்களை செய்வார்கள். அதுவும் இலகுவானது தானே.
அரசியல் ஆர்வமுடையவனாய், மூன்றாம் நபராக என்னுடைய எண்ணங்களுக்கு அப்பால் இந்திய மக்களின் எண்ணங்களை அறிவதில் ஆர்வ கொண்டிருந்தேன். என்னுடைய நண்பர்களிடமும் காஷ்மீர் தாக்குதல் மற்றும் இந்திய-பாகிஸ்தான் மோதல் தொடர்பில் உரையாடியிருந்தேன். நண்பர்களின் உரையாடல் பொதுமையாக நிலையான யுத்தத்தை ஏற்றுக் கொள்ளாத தன்மையையே வெளிப்படுத்தி இருந்தது. குறிப்பாக இந்தியாவின் ஆள்புலத்துக்குள் பிரபலமான சுற்றுலா மையத்தில் புகுந்து தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நிகழ்த்துவது, இந்திய அரசின் புலனாய்வு தள பலவீனத்தை வெளிப்படுத்துவதாகவே நண்பர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள். மேலும் தங்கள் உள்ளக பலவீனங்களை மறைப்பதற்காகவே இந்திய மத்திய அரசாங்கமும் உடனடியாக பாகிஸ்தான் மீது குற்றத்தை சுமர்த்தி, தேசியவாதத்தினூடாக தங்கள் தவறை மூடி மறைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்கள். இதுவும் சிந்திக்க வேண்டிய விடயமாகவே அமைகின்றது.
மேலும், ஜம்மு காஷ்மீர் நண்பர்கள் தாங்கள் மீளவும் ஓரங்கட்டப்பட்டு விடுவமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்தினார்கள். நீண்ட காலம் அரசியல் நெருக்கடியில் பொருளாதாரத்தை இழந்த சமுகம், தமது அரசியல் பிரச்சினைகளை ஓரங்கட்டி, தமது பொருளாதார இருப்பின் மீதே நாட்டத்தை வெளிப்படுத்துவர். ஈழத்தமிழர்களிடமும் சமகாலத்தில் அவ்வாறான போக்கே காணப்படுகின்றது. இந்நிலையை ஜம்மு காஷ்மீர் நண்பர்களின் உரையாடலில் அறிய முடிந்தது. தற்போது சிறிது காலமாகவே அமைதியான சூழ்நிலையில் சுற்றுலாத்துறையை மையப்படுத்தி தமது பொருளாதாரம் சிறிது ஸ்திரமான நிலையை உருவாக்கியதாகவும், சுற்றுலா பிரயாணிகள் மீதான திட்டமிட்ட தாக்குதல் மீளவும் தமது உள்ளூர்வாசிகளின் பொருளாதாரத்தை சிதைக்கும் செயலாக கவலைப்பட்டுக் கொண்டார்கள். காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் அரசாங்கத்தின் பார்வை, சமுக வலைத்தள போராளிகள் பார்வை, சாதாரண இந்தியர்கள் பார்வை மற்றும் உள்ளூர்வாசிகள் பார்வை என பல பரிமாணங்களை கொண்டுள்ளமையை உணரக் கூடியதாக உள்ளது.
(உரிமை வாராந்தம் மின்னிதழில் ஏப்ரல்-27, 2025அன்று பிரசுரிக்கப்பட்டது.)
