ஈழத்தமிழர் அரசியல்

இலங்கையில் எங்கட புத்தங்கள் இல்லத்தில் புத்தகம் வாங்கிக் கொள்ள முடியும்.

Amazon Kindleஇலும் புத்தகம் வாங்கிக் கொள்ள முடியும்.

முன்னுரை

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முன்னைய தேர்தல்களிலிருந்து, வேறுபட்டதொரு அரசியல் நடத்தையை ஈழத்தமிழரசியலில் வெளிப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் மக்களை வழிப்படுத்துபவர்களாக அரசியல் கட்சிகளும் போராட்ட இயக்கங்களுமே முதன்மையாக செயற்பட்டுள்ளன. இந்த பின்னணியில் தென்னிலங்கை வேட்பாளர்களில் எதிரணி வேட்பாளர்களை ஆதரிப்பது, நல்ல பேயை தேர்வு செய்வது, புறக்கணிப்பது மற்றும் சிலர் சுயாதீனமாக களமிறங்குவதென தெரிவுகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலினை மூலோபாயரீதியாக கையாள்வதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கான களமாக, தமிழ்ப் பொதுவேட்பாளரை களமிறக்கி ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த முனைந்துள்ளமை முன்னேற்றகரமான அரசியலாகும். விசேடமாக நீண்டகாலமாக தமிழ் மக்களிடம் வறுமையாக காணப்பட்ட பொதுக்கட்டமைப்பு ஒன்றின் உருவாக்கமும், தமிழ்ப் பொதுவேட்பாளரை முன்னிறுத்தி உருவாகியுள்ளது. இது நிலைக்க வேண்டிய அரசியலாகும்.

நோபல் பரிசு வெற்றியாளர் விஷ்வா சிம்போர்ஸ்கா குறிப்பிடுவது போல், ‘கற்பனாவாதங்களை கனவு காண்பதைவிட அல்லது துரத்துவதைவிட, அதிகரிக்கும் மாற்றங்களுக்காக பாடுபடுவது மிகவும் பயனுள்ளதாக அமையும்’. அதுவே மூலோபாய ரீதியாக ஆக்கபூர்வமான செயற்பாடாகவும் அமையக்கூடியதாகும். விடுதலைக்காக போராடும் தேசிய இனமாக ஈழத்தமிழர்கள் கிடைக்கும் களங்களை பயன்படுத்தி கொள்ள முயல்வதே உசிதமானதாகும். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சிவில் சமுகங்களின் கூட்டிணைவு மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டிணைவான தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினூடாக முன்னெடுக்கப்படும் ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ தமிழ் அரசியலில் மூலோபாய ரீதியான முயற்சியாக அமைகின்றது.

அரசியல் பத்தி எழுத்தாளராக 2023இன் இறுதியிலிருந்து, ஈழத்தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலை கையாள்வது தொடர்பில், தொடர்ச்சியாக தினக்குரல் பத்திரிகையில் எழுதி வருகின்றேன். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் ஈழத்தமிழர்களுக்கு புதியதொரு வாய்ப்பை திறந்துள்ளது. எனவே, அரசியல் பத்தி எழுத்துக்களுக்கு அப்பால், வரலாற்றை பதிவு செய்ய வேண்டிய தேவையும் காணப்படுகின்றது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் களச்சூழல், கடந்கால வரலாற்று அனுபவங்கள், ஈழத்தமிழரசியலின் நடத்தை சமுகவெளியில் அதிக விவாதங்களுக்கு உட்படுத்த வேண்டும். இப்பின்புலத்திலேயே, ‘இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல்’ எனும் இந்நூலை உருவாக்கியுள்ளேன்.

இந்நூல் உருவாக்கத்திற்கு எண்ணமாயும் செயலாயும் பலர் செயற்பட்டுள்ளனர். குறிப்பாக, என் எழுத்து பாதை பேராசிரியர் கே. ரீ.கணேசலிங்கம் அவர்களின் நெறிப்படுத்திலிலேயே கட்டமைக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் நிறைவான நன்றிகள். அவ்வாறே நான் இந்நூல் தொடர்பான ஆரம்ப சிந்தனையை உரையாடிய நாள் முதல் இந்நூல் அச்சு வடிவம் பெறும் வரையில் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. சி.திருச்செந்தூரன் அவர்களின் உந்துதலே நூலின் முழுவடிவமாகும். ஆசானுக்கு நன்றிகள். மேலும், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. தி.விக்னேஸ்வரன் அவர்களிடம் எனது நூல் முயற்சியை பகிருகையில், ஆக்கபூர்வமான கருத்துக்களூடாக நூலை செம்மைப்படுத்தியிருந்தார். ஆசானுக்கும் நன்றிகள். ஈழத்தின் மூத்த அரசியல் வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள், எனது கட்டுரை உருவாக்கங்களுக்கு பெறுமதியான ஆழமான விடயங்களை தந்து உதவியிருந்தார். நன்றிகள்.

இந்நூலிற்கான முகப்பு அட்டையினை வடிவமைத்து தந்த தம்பி ஆனந்தகுமார் வேதாகுலன் மற்றும் அவரது Vital Masks Private Ltd நிறுனவனத்தினருக்கும், புத்தக வடிவமைப்பு மற்றும் அச்சுப்பிரதி செய்துள்ள Discovery book Palace – சென்னை நிறுவனத்தினருக்கும் என்றும் நன்றிகள்.

மேலும், எனது முயற்சிகளை பெரும் சிகரமாய் இரசிக்கும் இறையாகியுள்ள என் அன்னைக்கு இந்த புத்தகத்தை சமர்ப்பிப்பதுடன், என்னை உயர்த்திவிட்ட தந்தைக்கும், எனை உயர்த்திப் பார்க்கும் சசோகதர்களுக்கும் நன்றிகள்.

பல ஜாம்பவான்களை சந்தித்துள்ள எழுத்துலகில், இது என் முதல் முயற்சி. வாசகர்களின் கருத்துக்கள் என்னை தொடர்ச்சியாக செப்பனிடுமென்று நம்பிக்கை கொள்கிறேன்.

ஐ.வி.மகாசேனன்                                                                                                                                20.08.2024
M.A (PolSc) (DU, Indida.) (R),
MIR (UPDN, Sri Lanka),
BA Hons PolSc (UOJ, Sri Lanka).